இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்பினால் ‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தை கைவிட வேண்டும்’ டெல்லி மாநாட்டில் மோடி பேச்சு


இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்பினால் ‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தை கைவிட வேண்டும்’ டெல்லி மாநாட்டில் மோடி பேச்சு
x
தினத்தந்தி 18 Jan 2017 12:00 AM GMT (Updated: 17 Jan 2017 10:15 PM GMT)

‘இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்பினால், பாகிஸ்தான் பயங்கர வாதத்தை கைவிட வேண்டும்’ என்று டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

‘இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்பினால், பாகிஸ்தான் பயங்கர வாதத்தை கைவிட வேண்டும்’ என்று டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

69 நாடுகள் பங்கேற்கும் மாநாடு

டெல்லியில் 69 நாடுகள் பங்கேற்கும் ‘ரெய்சினா டயலாக்’ மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

என் சக இந்தியர்கள் மாற்றத்துக்கான ஒரு உத்தரவை வழங்கி எங்கள் அரசை தேர்ந்தெடுத்தார்கள். அந்த மாற்றம் வெறும் அணுகுமுறை மாற்றம் அல்ல. அது மனப்போக்கு மாற்றம். அந்த மாற்றம், உறுதியான முடிவுகளை எடுப்பதற்கானது.

அந்த உத்தரவு, பொருளாதாரத்தை, சமுதாயத்தை மாற்றுவதற்கானது. அந்த மாற்றம், லட்சோப லட்சம் இந்திய இளைஞர்களின் அபிலாசைகளையும், நம்பிக்கையையும் பொதியப்பெற்றதாகும்.

அதிவேக முக்கியத்துவம்

இந்தியாவின் நீடித்த வளர்ச்சி, உலகத்துக்கு தேவைப்படுகிறது. உலகத்தின் வளர்ச்சி, இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.

எனது அரசு 2014-ம் ஆண்டு பொறுப்புக்கு வந்தது முதல், இந்தியாவை வளர்ச்சி, வளம், பாதுகாப்பு என முன்னேற்றுவதற்கு வழிநடத்துவதில், அதிவேக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் தொடர்ந்து பல்வேறு திசைகளில் இருந்து வேகமாக பெருகி வருகின்றன.

கனவு

அண்டை நாடுகளுடன் நல்ல தொடர்பினை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. எல்லா அண்டை நாடுகளுடனும் கூட்டு வைத்திருக்கிறோம். எங்கள் முயற்சிகளுக்கான பலன்களை பார்க்க முடியும்.

ஆப்கானிஸ்தானில் கஷ்டங்களுக்கு மத்தியில், எங்கள் கூட்டு, நிறுவனங்களை கட்டுவதில் உதவுகிறது. பாதுகாப்பு உறவு, வளர்ச்சி பெற்றுள்ளது. வங்காளதேசத்தில் அரசியல் ரீதியில் நல்ல புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக நிலம் மற்றும் கடல் எல்லைகளை குறிப்பிடலாம். பூடானில் எங்கள் ஒட்டுமொத்த செயல்பாடுகள் எரிசக்தி, ஸ்திரத்தன்மை சார்ந்ததாகும்.

இந்த கண்ணோட்டத்தில்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட ‘சார்க்’ நாட்டு தலைவர்களை எனது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைத்தோம்.

‘பாகிஸ்தான் பயங்கரவாதம் கைவிட வேண்டும்’

நான் லாகூருக்கும் சென்றேன்.

ஆனால் இந்தியா மட்டுமே சமாதான பாதையில் நடை போட்டு விட முடியாது. இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினால், அந்த நாடு பயங்கரவாதத்தை கைவிட்டு, விலகி வர வேண்டும்.

கடந்த 2½ ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் வல்லரசு நாடுகளுடனான உறவில் பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறோம். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புடன் பேசியதில், எங்கள் கூட்டினை வலுப்படுத்த ஒப்புக்கொண்டிருக்கிறோம். ரஷியா நிரந்தர நண்பராக உள்ளது. நாங்கள் நீண்ட பேச்சு நடத்தி இருக்கிறோம். எங்களுக்கு இடையேயான ராணுவ உறவு ஆழமாகி உள்ளது. ஜப்பானுடன் உண்மையான, ராணுவம் சார்ந்த கூட்டு வைத்துள்ளோம்.

பயங்கரவாதத்தில் இருந்து மதத்தை நாங்கள் தொடர்பற்று போகச்செய்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவு தந்து ஏற்றுமதி செய்கிற அண்டை அயலாரை நாங்கள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story