”தமிழக பொறுக்கிகள்”: மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சுப்ரமணியன் சுவாமி


”தமிழக பொறுக்கிகள்”: மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சுப்ரமணியன் சுவாமி
x
தினத்தந்தி 18 Jan 2017 4:29 AM GMT (Updated: 18 Jan 2017 4:29 AM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தாமாக முன்வந்து போராடி வரும் நிலையில், சுப்ரமணியன் சுவாமி, தமிழக பொறுக்கிகள் என்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புதுடெல்லி,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தாமாக முன்வந்து போராடி வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி, தமிழக பொறுக்கிகள் என்று தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் தை 3-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் இளைஞர்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் விடிய விடிய போராடி வருகின்றனர். போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் ஆதரவு கருத்துக்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவதை வாடிக்கையாக கொண்ட சுப்ரமணியன் சுவாமி, நேற்று வெளியிட்ட ஒரு கருத்து மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில்,  “டுவிட்டரில் பீட்டா அமைப்பை அச்சுறுத்தும் வகையில்  விதமாக கருத்துக்களை பதிவு செய்யும் அனைத்து தமிழ் பொறுக்கிகளும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக தங்கள் முகவரியையும் எழுத வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  

அதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், முகவரியை கேட்டதும் பொறுக்கிகள் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்? பயமா? ஸ்டாலினும் கருணாநிதியும் ஏன் தமிழக போலீஸ் படைகளை வைத்துக்கொள்ளாமல் மத்திய பாதுகாப்புடன் உள்ளனர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story