ஜல்லிக்கட்டு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை


ஜல்லிக்கட்டு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2017 2:15 PM GMT (Updated: 18 Jan 2017 2:15 PM GMT)

ஜல்லிக்கட்டு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி,  

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. 

ஜல்லிக்கட்டு காளைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் 2011-ம் ஆண்டு சேர்த்தது. 2014-ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக கட்டுப்பாடுகளுடன்கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. முக்கிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. ஆனாலும் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா அமைப்பு வழக்கு தொடுத்ததால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் இளைஞர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். 

 
இதுபற்றி டெல்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் (பா.ஜனதா ஆட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக இருந்தவர்) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்கையில், ஜல்லிக்கட்டைப் பொறுத்தமட்டில், நான் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பதவி வகித்தபோது, நாங்கள் அறிவிக்கை வெளியிட்டோம். அதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விடவில்லை. ஆனால் அந்த அறிவிக்கையை செயல்படுத்துவதற்குத்தான் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு போட்டுள்ளது.

 அது தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறபோது, மத்திய அரசின் அறிவிக்கையானது சட்டத்தின் பரிசீலனையில் நிலைத்து நின்று, செல்லுபடியாகும், நல்ல தீர்ப்பு வரும் என உறுதியாக சொல்கிறேன். நான் மிகவும் உறுதியாக சொல்வதற்கு காரணம், அந்த அறிவிக்கையில் காளைகளின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பாரம்பரியம் காக்கப்படுகிற வகையில் அந்த விளையாட்டுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. அது ஒரு சீரான அறிவிக்கையாகும். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Next Story