கான்பூரில் நடந்த 2 ரெயில் விபத்துகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்பா?


கான்பூரில் நடந்த 2 ரெயில் விபத்துகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்பா?
x
தினத்தந்தி 18 Jan 2017 11:45 PM GMT (Updated: 18 Jan 2017 11:12 PM GMT)

கான்பூரில் நடந்த 2 ரெயில் விபத்துகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. காரணமா? என்று தற்போது பிடிபட்டுள்ள 6 பேரிடம் விசாரணை

பாட்னா,

கான்பூரில் நடந்த 2 ரெயில் விபத்துகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. காரணமா? என்று தற்போது பிடிபட்டுள்ள 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

2 ரெயில் விபத்துகள்

இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த நவம்பர் மாதம் உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே தடம்புரண்டது. இந்த கோர விபத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். இந்த சுவடு மறைவதற்குள் அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த 2 ரெயில் விபத்துகள் குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். நாசவேலை காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை அமைப்புகள் புலனாய்வுப்பணிகளில் ஈடுபட்டு வந்தன.

நேபாளத்தில் 3 பேர் கைது

இந்த நிலையில் பீகாரின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தின் கோரசகன் ரெயில் நிலையம் அருகே கடந்த அக்டோபர் 1-ந் தேதி குக்கர் வெடிகுண்டு ஒன்று தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரித்து வந்த போலீசார், உமா சேகர் படேல், மோதிலால் பஸ்வான், முகேஷ் யாதவ் ஆகிய 3 பேரை சமீபத்தில் மாவட்ட தலைநகர் மோதிகாரியில் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் 3 பேர் நேபாளத்திலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேபாள போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்து இளைஞர்கள்

மோதிகாரியில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, கான்பூரில் நடந்த 2 ரெயில் விபத்துகளுக்கும் தாங்களே காரணம் என ஒப்புக்கொண்டனர். நேபாள போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ள ஒருவர்தான் இதற்காக பணம் அளித்ததாகவும் கூறினர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவின் பேரிலேயே அரங்கேற்றி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரில், ஒருவரை தவிர மீதமுள்ள 5 பேரும் இந்துக்கள் ஆவார். இதன் மூலம் வேலையில்லா இந்து இளைஞர்களை பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பு ஈடுபடுத்தி வருவது கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீகாரில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடம் விசாரணை நடத்த ‘ரா’, ‘ஐ.பி.’ போன்ற உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மோதிகாரி சென்றுள்ளனர். ரெயில் கவிழ்ப்பு சம்பவங்களில் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தொடர்பு குறித்து அவர்கள் விரிவாக விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. 

Next Story