ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 19 Jan 2017 9:03 PM GMT (Updated: 19 Jan 2017 9:03 PM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

புதுடெல்லி,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

போராட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த என்.ராஜாராமன் என்ற வக்கீல் நேற்று இந்த பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றார்.

பாதுகாப்பு வழங்க கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான அவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் கூடி 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருவது பற்றியும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் கூறினார். கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்திய பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது போன்று எதுவும் நடந்துவிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த பிரச்சினையை ஒரு வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட வக்கீல் என்.ராஜாராமன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நீதிபதிகள் மறுப்பு

ஆனால் அதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். நீங்கள் ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தீர்கள்? என்று கேட்ட நீதிபதிகள், இந்த பிரச்சினை குறித்து சென்னை ஐகோர்ட்டுக்கு சென்று முறையிடுங்கள் என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். 

Next Story