உத்தரபிரதேசத்தில் பள்ளி பஸ் மீது மணல் லாரி மோதல்; மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் பலி


உத்தரபிரதேசத்தில் பள்ளி பஸ் மீது மணல் லாரி மோதல்; மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் பலி
x
தினத்தந்தி 19 Jan 2017 9:24 PM GMT (Updated: 19 Jan 2017 9:24 PM GMT)

உத்தரபிரதேசத்தில் பள்ளிக் கூட பஸ் மீது லாரி மோதியதில் 18 மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் பலியாயினர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பள்ளிக் கூட பஸ் மீது லாரி மோதியதில் 18 மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் பலியாயினர். கடும் பனிமூட்டம் காரணமாக இந்த கோர விபத்து நிகழ்ந்து உள்ளது.

25 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம், இடா மாவட்டத்தின் அலிகஞ்ச்-தர்யாபு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு நேற்று காலை அந்த பள்ளியின் பஸ் அலிகஞ்ச் நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக பஸ் மெதுவாக சென்றது.

அந்த பஸ் ஆசாத்பூர் என்னும் இடம் அருகே சென்றபோது, பஸ்சின் மீது பின்னால் வந்த ஒரு மணல் லாரி பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் பஸ்சும், மணல் லாரியும் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 18 மாணவ-மாணவிகள் உள்பட 25 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த மாணவ- மாணவிகள் உள்பட 30 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

இடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி முதல் 21-ந்தேதி முடிய 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து இருந்தது.

அதையும் மீறி பள்ளிக் கூடம் நடத்தப்பட்டதால், விடுமுறை நாளில் ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் சாம்பு நாத் யாதவ் உத்தரவிட்டார்.

மோடி இரங்கல்

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், “இடா விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். குழந்தைகளை இழந்த குடும்பத்தினருடன் எனது வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். 

Next Story