அவசரச் சட்டம் பிறப்பிப்பது மத்திய அரசா? மாநில அரசா? ஆலோசனை நடைபெறுகிறது


அவசரச் சட்டம் பிறப்பிப்பது மத்திய அரசா? மாநில அரசா? ஆலோசனை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 20 Jan 2017 12:24 PM GMT (Updated: 20 Jan 2017 12:24 PM GMT)

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிப்பது மத்திய அரசா? மாநில அரசா? என ஆலோசனை நடைபெறுகிறது.


புதுடெல்லி, 

ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்தெறிய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் அறவழியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது இப்போது வெற்றியின் விளிம்பை எட்டி உள்ளது.   தமிழக மக்கள் போராட்டத்தில் இறங்கியதை அடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றும் முயற்சியில் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவரும் என முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் உறுதி அளித்து உள்ளார். மத்திய அரசும் முழு உதவி செய்வதாக உறுதியளித்து உள்ளது. 

தமிழக அரசு அனுப்பிய அவசரச் சட்டத்துக்கான வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. வரைவானது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பேசுகையில் “ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம், மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இருதரப்பும் நடவடிக்கை எடுக்கலாம். இந்தியாவின் ஒருபகுதி தமிழகம், அவர்களுடைய கருத்துக்கு நாம் மதிப்பளிக்கவேண்டும். யார் அவசரச் சட்டம் பிறப்பிப்பது என்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கள் பேசிவருகிறது என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது. அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். 

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசரச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story