104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை


104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை
x
தினத்தந்தி 15 Feb 2017 9:45 PM GMT (Updated: 15 Feb 2017 8:11 PM GMT)

ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்து உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்து உள்ளது. விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. கடல்சார் ஆராய்ச்சி, பூமி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

அமெரிக்காவுக்கு சொந்தமான 88 ‘டோவ்’ செயற்கைகோள்கள், 8 லெமூர் செயற்கைகோள்கள், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான பி.ஜி.யு.எஸ்-அட், கஜகஸ்தான் நாட்டின் ஏ1-பார்பி-1 செயற்கைகோள், நெதர்லாந்துக்கு சொந்தமான பி.இ.ஏ.எஸ்.எஸ்.எஸ். செயற்கைகோள், சுவிட்சர்லாந்தின் டி.ஐ.டி.ஓ-2, அமீரகத்துக்கு சொந்தமான நைப்-1 ஆகிய வெளிநாடுகளுக்கு சொந்தமான செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இவற்றுடன் இந்தியாவுக்கு சொந்தமான 2 நானோ செயற்கைகோள் மற்றும் 714 கிலோ எடை கொண்ட கார்டோ சாட்-2 ஆகிய செயற்கைகோள்கள் அடங்கும். செயற்கைகோள்களில் 101 செயற்கைகோள்கள் நானோ வகையை சேர்ந்தவையாகும். இவற்றின் மொத்த எடை 1,378 கிலோ ஆகும்.

வெற்றிகரமாக பாய்ந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9.28 மணிக்கு 104 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டின் எடை 320 டன் (3 லட்சத்து 20 ஆயிரம் கிலோ) ஆகும்.

செயற்கைகோள் பிரிந்தது

புறப்பட்ட 31 நிமிடத்தில் ராக்கெட் பூமியில் இருந்து 520 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து அனைத்து செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் திட்டமிட்டபடி அந்தந்த இலக்கில் கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3-வது மற்றும் 4-வது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பூமி கண்காணிப்பு

முதன்மை செயற்கைகோளான ‘கார்டோ சாட்-2’ பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, ராணுவ ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைகோளில் 986 வாட் திறன்கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

‘கார்டோ சாட்-2’ செயற்கைகோள் பூமி கண்காணிப்பு மற்றும் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த செயற்கைகோள் மூலம் 1,500 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கலாம். மேலும் இதன் மூலம் பேரிடர் மேலாண்மை, செல்போன் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுனர்களுக்கு குரல் வழி மூலம் முறையாக ஓட்டச் சொல்லி வாகனங்களை இயக்க செய்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

வரலாற்று சாதனை

இஸ்ரோ வரலாற்றில் கடந்த 2008-ம் ஆண்டு அதிகபட்சமாக ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகில் எந்த நாடும் இத்தனை எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ரஷியா 37 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

உலக சாதனை படைத்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இஸ்ரோ தலைவர் கிரண்குமாருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், “104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய உங்களுக்கும், உங்களது விஞ்ஞானிகள் குழுவிற்கும் வாழ்த்துகள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை வான்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் திறன் மேலும் அதிகரித்து இருப்பதை நிரூபிப்பதாக அமைந்து உள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மற்றும் நானோ செயற்கைகோள்களுடன், கார்டோசாட் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இஸ்ரோவின் இந்த குறிப்பிடத்தக்க சாதனை நமது விண்வெளி அறிவியல் சமூகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை தரும் தருணம் ஆகும்” என்று குறிப்பிட்டார். 

Next Story