நடிகை பாவனாவை காரில் கடத்தி, பாலியல் தொல்லை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு


நடிகை பாவனாவை காரில் கடத்தி, பாலியல் தொல்லை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2017 10:19 PM GMT (Updated: 18 Feb 2017 10:19 PM GMT)

கேரளாவில் நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் தொல்லை தந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் தொல்லை தந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

நடிகை பாவனா

‘சித்திரம் பேசுதடி,’ ‘தீபாவளி,’ ‘அசல்,’ ‘ஜெயம்கொண்டான்’ உள்பட பல படங்களில் நடித்தவர், பாவனா. கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங் களில் நடித்து இருக்கிறார்.

பாவனா நடித்து வரும் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் அருகில் நடந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு இரவில் கார் மூலம் அவர் கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

காரில் கடத்தல்

அவரது கார் நெடும்பச்சேரி அருகில் உள்ள அதானி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அவரது காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு வாகனம், அவரது காரின் பின்பகுதியை இடித்தது. அப்போது கார் நின்றது. அப்போது அந்த வாகனத்தில் இருந்தவர்கள், பாவனாவின் காருக்குள் வலுக்கட்டாயமாக ஏறிக்கொண்டனர்.

நடிகை பாவனாவுடன் அமர்ந்த அவர்கள் டிரைவரை மிரட்டி காரை கொச்சிக்கு கடத்தினார்கள்.

பாலியல் தொல்லை

கார் கொச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அந்த மர்ம ஆசாமிகள் பாவனாவிடம் அத்துமீறி நடந்தனர். பாலியல் தொல்லை தந்தனர். அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டனர்.

கிட்டத்தட்ட 2 மணி நேர பயணத்துக்கு பின்னர் கார், பலாரிவட்டம் என்ற இடத்தை நெருங்கியது. அப்போது அந்த மர்ம ஆசாமிகள் காரில் இருந்து இறங்கி தப்பி சென்று விட்டார்கள்.

அதைத் தொடர்ந்து நடிகை பாவனா, காரில் அந்தப் பகுதியில் திரிக்ககரா என்ற இடத்தில் உள்ள சினிமா டைரக்டர் லால் வீட்டுக்கு சென்றார். அவரிடம் தனக்கு நேர்ந்த கதியை சொல்லி அழுதார். அதையடுத்து டைரக்டர் லால், பலாரிவட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

போலீசார் விரைந்து வந்து பாவனாவிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். மர்ம ஆசாமிகள் பற்றிய அடையாளங்கள் பற்றியும் விசாரித்தார்கள். பாவனா கொடுத்த புகாரை பதிவு செய்தார்கள்.

போலீசாருக்கு பாவனாவின் கார் டிரைவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக மர்ம ஆசாமிகளின் வாகனம் பின்தொடர்ந்து வரும் வகையில் அவர் காரை ஓட்டி வந்ததாக சந்தேகித்தனர். டிரைவரிடம் இதுபற்றி விசாரித்து, தங்கள் சந்தேகத்தை உறுதி செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து டிரைவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

கேரளாவில் இந்த பிரச்சினை நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

தனிப்படை

இதை எதிர்க்கட்சிகளான காங்கிரசும், பாரதீய ஜனதாவும் அரசியல் ஆக்கி விட்டன. பெண்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறி, கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய மாநில போலீஸ் டி.ஜி.பி., லோக்நாத் பெஹரா கொச்சி நகரம் மற்றும் எர்ணாகுளம் ஊரக போலீசாரை கொண்டு ஒரு சிறப்பு படையை அமைத்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் கூறும்போது, “இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சாலக்குடியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர். 

Next Story