நம்பிக்கை வாக்கெடுப்பை பெங்களூரு சிறை தொலைக்காட்சியில் சசிகலா பார்த்தார்


நம்பிக்கை வாக்கெடுப்பை பெங்களூரு சிறை தொலைக்காட்சியில் சசிகலா பார்த்தார்
x
தினத்தந்தி 19 Feb 2017 4:41 AM GMT (Updated: 19 Feb 2017 4:41 AM GMT)

சிறைக்கு வந்த நாளில் இருந்து நேற்றுதான் சசிகலா கொஞ்சம் சந்தோஷமாக காணப்பட்டார் என சிறை கண்காணிப்பாளர்கள் வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் தண்டனை பெற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அவருடைய உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் அறையே சசிகலாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள ஆண் கைதிகளுக்கான பிரிவில் சுதாகரன் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் சிறையில் இவர்கள் 3 பேரின் நடவடிக்கைகள் பற்றி சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கைதாகி சிறையில் உள்ள 3 பேருக்கும் எந்த சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு தான் வழங்கப்படுகிறது. சாதாரண கைதிகளை போன்றே அவர்கள் சிறையில் நடத்தப்பட்டு வருகின்றனர். சசிகலா கேட்டு கொண்டதன் பேரில் அவருக்கு சத்துமாவு(விட்டமின் பவுடர்) வழங்கப்பட்டது. சுதாகரன் சாமி கும்பிடுவதற்காக சாமி போட்டோ ஒன்றையும், விபூதியும் கேட்டார். இதையடுத்து, அவருக்கு சாமி போட்டோ மற்றும் விபூதி வழங்கப்பட்டது.“ இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள்ளேயே இருந்தாலும் தமிழக அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். சசிகலா தினமும் காலையில் நூலகத்துக்கு சென்று சுமார் 2 மணி நேரம் தமிழ், ஆங்கிலம் ஆகிய செய்தித்தாள்களை தீவிரமாக படிக்கிறார்.  மகளிர் சிறை பிளாக்கில் உள்ள தொலைக்காட்சி அறைக்கு சென்று செய்தி சேனல்களை பார்க்கிறார். தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசின் மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால், காலை 10.30 மணிக்கே சசிகலா இளவரசியுடன் தொலைக்காட்சி அறைக்கு வந்துவிட்டார்.

சபை கூடியதும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட போது, ‘‘எனக்கு அப்போதே தெரியும். திமுக ஏதாவது சதித் திட்டம் போடுவார்கள்'' என சொல்லி, கையை பிசைந்து கொண்டிருந்தார். அவையில் நடந்த கூச்சல் குழப்பம், தர்ணா, அமளி எல்லாவற்றையும் சசிகலா பொறுமையாக கவனித்தார். திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் நடந்துக்கொண்ட விதத்தை கண்டு கொதித்து, தரையை ஓங்கி தட்டினார்.
அவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதும் மகளிர் சிறை கண்காணிப்பாளர் ஆர். அனிதாவிடம், தொலைபேசியில் பேச அனுமதி என கேட்டார். 

அதற்கான மனுவை நிரப்பிக் கொடுத்ததும் அனிதா, “அவசரத் தேவைக்கு மட்டுமே தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படும்” என்று கூறி அனுமதி வழங்கினார். இதையடுத்து, சசிகலா சிறையில் இருக்கும் எஸ்டிடி பூத் மூலமாக சென்னையில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகியை தொலைபேசியில் தொடர்புகொண்டு 10 நிமிடங்கள் பேசினார். சசிகலா தொலைக்காட்சிகளை தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்ததால் மதிய உணவு சாப்பிடவில்லை. ஒரு வழியாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக வெற்றிபெற்றதை பார்த்து உற்சாகமாக கைகளை தட்டி சத்தமாக சிரித்தார்.

சிறைக்கு வந்த நாளில் இருந்து நேற்றுதான் சசிகலா கொஞ்சம் சந்தோஷமாக காணப்பட்டார். இவ்வாறு சிறை கண்காணிப்பாளர்கள் வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.


Next Story