மேகதாது அணை திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம் சித்தராமையா அறிவிப்பு


மேகதாது அணை திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம் சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2017 5:42 AM GMT (Updated: 19 Feb 2017 5:42 AM GMT)

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மேகதாது அணை திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகம்–தமிழக எல்லையில் ஒகேனக்கல் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான வரைவுதிட்டத்தை கர்நாடக அரசு தயாரித்து வந்தது. காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதை தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு விதான சவுதாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கி மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.

இந்தநிலையில் ஹாசன் மாவட்டத்தில் அரிசிகெரேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முதல் - மந்திரி சித்தராமையா தொடக்கி வைத்தார். பின்னர் முதல் - மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அமைச்சர் அவையில் ஒப்புதல் அளித்து அதற்கான நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

குடிநீர் திட்டத்தை செயல்படுத்த எவ்வித சட்ட தடையும் இல்லை. மேலும், மேகதாது அணை திட்டம் அமையும் இடம் கர்நாடக எல்லையில் உள்ளதால் யாருடைய அனுமதியும் நமக்கு தேவையில்லை. மேகதாது அணை கட்டுவதால் நமக்கும், தமிழகத்துக்கும் தண்ணீர் கிடைக்கும்.
சந்தேகம் வேண்டாம். அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்தை தமிழகம் எதிர்த்து வருகிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், மேகதாது திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம், இதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story