உத்தரபிரதேச சட்டசபைக்கு 3-ம் கட்ட தேர்தல் 61% வாக்குப்பதிவு


உத்தரபிரதேச சட்டசபைக்கு 3-ம் கட்ட தேர்தல் 61% வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2017 1:06 PM GMT (Updated: 19 Feb 2017 1:06 PM GMT)

உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.இதில் 69 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில் 61% வாக்குப்பதிவாகி உள்ளது.


லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 2 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாநிலத்தின் மத்திய மற்றும் அவாத் பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த 69 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பா.ஜனதா, சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்றைய தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக 2.41 கோடி பேர் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இன்றைய வாக்குப்பதிவுக்காக 25,603 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.  மதியம் 3 மணி நிலவரப்படி 53% வாக்குப்பதிவானது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெங்கடேஷ் கூறியதாவது:

3-வது கட்டமாக 69 தொகுதிகளில் நடந்த சட்டசபை தேர்தலில் 61% வாக்குப்பதிவாகி உள்ளது. 69 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. துணை ராணுவம் மற்றும் மாநில போலீசார் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story