பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்படுவாரா?


பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்படுவாரா?
x
தினத்தந்தி 19 Feb 2017 10:16 PM GMT (Updated: 19 Feb 2017 10:15 PM GMT)

தன்னை சென்னை சிறைக்கு மாற்றக்கோரி தமிழகம் மற்றும் கர்நாடக சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுத சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

தன்னை சென்னை சிறைக்கு மாற்றக்கோரி தமிழகம் மற்றும் கர்நாடக சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுத சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

4 ஆண்டுகள் சிறை தண்டனை


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவும், இளவரசியும் சாதாரண சிறையில் ஒரே அறையில் இருக்கின்றனர். இந்த சொத்து குவிப்பு வழக்கு தமிழகத்தை சேர்ந்தது. இந்த வழக்கு விசாரணை மட்டுமே பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இறுதி நிலையை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிவிட்டதால், இந்த வழக்கின் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னை சென்னை சிறைக்கு மாற்றக்கோரி தமிழக, கர்நாடக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகலா தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எந்த சிக்கலும் இருக்காது

இந்த வழக்கு தமிழகத்தின் வழக்கு என்பதால், இருமாநில சிறைத்துறை அதிகாரிகள் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டால் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும், இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி தேவை இல்லை என்றும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் யாராவது சுப்ரீம் கோர்ட்டில் மனு போட்டு, சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றக்கூடாது என்று கோரினால், அப்போது சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிடும். ஆனால் எந்த மாதிரியான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் என்று சொல்ல இயலாது என்று சிறைத்துறை அதிகாரி கூறினார். 

Next Story