பாகிஸ்தானின் கள்ளத்தனம்; வங்காளதேசம் வழியாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுகிறது


பாகிஸ்தானின் கள்ளத்தனம்; வங்காளதேசம் வழியாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுகிறது
x
தினத்தந்தி 20 Feb 2017 9:37 AM GMT (Updated: 20 Feb 2017 9:37 AM GMT)

வங்காளதேச எல்லையில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை போலி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து உள்ளது.

கொல்கத்தா,

வங்காளதேச எல்லையில் ரூ. 96 ஆயிரம் மதிப்பிலான போலி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தானை சேர்ந்த சாரிப் உல் ஷாக் என்பவரிடம் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளது. போலி ரூபாய் நோட்டுகளை இந்தியாவிற்குள் கடத்த முயன்ற சாரிப் உல் ஷாக்கை எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்தது. கடந்த 8-ம் தேதியும் மேற்குவங்காள மாநிலம் மால்டாவில் வங்காளதேச எல்லையில் அசிசூர் ரகுமான் என்பவரையும் போலி ரூபாய் நோட்டுகளை கடத்தியதாக எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்தது. 

ரகுமானிடம் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை போலி 2000 ரூபாய் நோட்டுகள் 40-ஐ பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட ரகுமானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை என அவர் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, வங்காளதேசம் எல்லையின் வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்பட்டு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது.

இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட இரு மையங்கள் மூடப்பட்டது என கடந்த ஜனவரியில் உளவுத்துறை தகவல்கள் குறிப்பிட்டன. 
இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்டு வங்காளதேச எல்லையின் வழியாக வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பழைய ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் இருந்தபோது பாகிஸ்தான் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வண்ணம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கடத்தியது. 

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் பயங்கரவாத செயல்களுக்கும் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அனுப்பப்படுகிறது. 
 
வங்காளதேசம் எல்லையில் வழியாக போலி ரூபாய் நோட்டுகளை இந்தியாவிற்குள் கடத்தும் முயற்சியானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதியும் எல்லையில் கட்டு கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் அகப்படவில்லை. அவர்கள் ரூபாயை இந்திய எல்லைக்குள் விசிவிட்டு, முகவர்களுக்காக காத்திருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. வங்காளதேச எல்லையானது தொடர்ச்சியாக போலி ரூபாய் நோட்டுகளை இந்தியாவிற்குள் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் உளவுத்துறை சிறப்பு இயக்குநரும், முன்னாள் சசஸ்திர சீமா பால் (இந்தியா-நேபாளம் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள படைப்பிரிவு) தலைவருமான அருண் சவுத்திரி பேசுகையில், “எல்லையில் உள்ள நம்முடைய எதிரிகள் நமக்கு தொந்தரவு கொடுப்பதை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் நம்முடைய பொருளாதாரத்தில் விஷத்தை கலப்பதை தொடர்வார்கள்... அதற்கான சிறந்த முறைதான் போலி ரூபாய் நோட்டுகளை இந்தியாவிற்குள் அனுப்புவது. அவர்கள் இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுகளை காப்பி அடித்து உள்ளனர்,” என்று கூறிஉள்ளார். 

Next Story