கட்ச் மாவட்டத்தை போன்று பண்டல்கண்டையும் வளர்ச்சி பெற செய்வோம்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு


கட்ச் மாவட்டத்தை போன்று பண்டல்கண்டையும் வளர்ச்சி பெற செய்வோம்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 20 Feb 2017 9:42 AM GMT (Updated: 20 Feb 2017 9:41 AM GMT)

கட்ச் மாவட்டத்தை போன்று பண்டல்கண்ட் பகுதியை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜாலவுன்(உ.பி),

உத்தர பிரதேச மாநிலம் பண்டல்கண்ட் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, ஆளும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். ஒராய் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:- “ சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகள் பண்டல்கண்டை பல ஆண்டுகளாக புறக்கணித்துள்ளன. நடைபெற இருக்கிற தேர்தல் பண்டல்கண்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமாஜ்வாடி- பகுஜன்சமாஜ்வாடியிடம் இருந்து விடுதலை பெறுவதை முடிவு செய்ய இருக்கிற தேர்தல் இது. 

ஐந்து ஆண்டுகளில் நாங்கள் பண்டல்கண்டை கட்ச் பகுதியை போல மாற்றுவோம். கடந்த 70 ஆண்டுகளில் பண்டல்கண்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. கனிம வளம் நிறைந்த பண்டல்கண்ட் உத்தர பிரதேசத்தின் தலைவிதியை மாற்றும். சட்டவிரோதமாக கனிம வளத்தை சுரண்டுவது தடுத்து நிறுத்தப்படும். இந்தியா விண்ணில் ஏவியுள்ள செயற்கை கோள் மூலம் சட்டவிரோத கனிம வளத்தை சுரண்டுவது கண்காணிக்கப்படும். 

பண்டல்காண்டில் எதுவுமே செய்யவில்லை என்று  மக்கள் கருதுகிறார்கள். மாநிலத்தின் முதல் இடத்திற்கு பண்டல்கண்டை கொண்டு வர முடியும். குஜராத்தில் கட்ச் என்ற ஒரு மாவட்டம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு எந்த ஒரு அரசு பணியாளரையாவது அங்கு பணியில் அமர்த்தினால், அந்தமான் சிறையில் இருப்பதை போல உணரப்பட்டது. ஆனால், நிலநடுக்கத்துக்கு பிறகு நாங்கள் கட்ச் பகுதியில் பணிகளை மேற்கொண்டோம். இன்று நாட்டில் அதிக வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கட்ச் திகழ்கிறது. 

நான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, ஒன்றுக்கொன்று நேரில் கூட பார்த்துக்கொள்ளாத கட்சிகளான பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் ஒன்றிணைந்தன. ஊழலுக்கு எதிராகவும் கருப்பு பணம் விவரத்தையும் நான் கேட்ட போது,  காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பேசுவதை கேட்டு நான் வியந்து போனேன்” இவ்வாறு அவர் பேசினார்.

Next Story