டெல்லியில் எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் போலி 2000 ரூபாய் நோட்டுகள்!!!


டெல்லியில் எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் போலி 2000 ரூபாய் நோட்டுகள்!!!
x
தினத்தந்தி 22 Feb 2017 8:59 AM GMT (Updated: 22 Feb 2017 8:59 AM GMT)

‘சில்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சடிக்கப்பட்ட போலி 2000 ரூபாய் நோட்டுகள் எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

உள்நாட்டில் கருப்பு பணம் பதுக்கலை ஒழிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் செலுத்தினர். அப்போது கோடி கணக்கில் கணக்கில் காட்டப்படாத பணம் மத்திய விசாரணை முகமைகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டது. மத்திய அரசு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய 2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்தும், புகைப்பட நகல் எடுத்தும் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டனர். புதிய போலி 2000 ரூபாய் நோட்டுகள் அவ்வபோது சிக்கி வருகிறது. 

இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து புதிய போலி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகள் விளையாட்டுக்காக பயன்படுத்தும் ‘சில்ரன் பாங்க் ஆப் இந்தியா’  என அச்சடிக்கப்பட்ட போலி 2000 ரூபாய் நோட்டுகள் எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் வந்து உள்ளது. கடந்த 6-ம் தேதி ஏடிஎம்மில் பணம் எடுத்தபோது போலி ரூபாய் நோட்டுகள் வந்து உள்ளது. போலி ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்டு இருந்த இடத்தில் ‘சில்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சடிக்கப்பட்டு உள்ளது.

 2000 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் சின்னம் இடம்பெற்று உள்ள இடத்தில் பிகே என எழுத்து இடம்பெற்ற போலி சின்னம் இடம்பெற்று உள்ளது. 

‘சில்ரன் பாங்க் ஆப் இந்தியா’  என அச்சடிக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்த போலி ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை உறுதிசெய்து உள்ள டெல்லி உயர் போலீஸ் அதிகாரி ஏடிஎம் முதலில் இதுபோன்ற 4 போலி ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளருக்கு வழங்கி உள்ளது. இச்சம்பவம் உள்ளூர் போலீசிடம் எடுத்துச் செல்லப்பட்டது. போலீசார் விசாரித்ததில் அவை போலி ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஏடிஎம்மில் பணம் எடுத்த போதும் போலி ரூபாய் நோட்டே வந்து உள்ளது.

போலி ரூபாய் நோட்டுகள் கிடைத்தது ரோகித் என்பவருக்கு என தெரியவந்து உள்ளது. ரோகித் கடந்த 6-ம் தேதி மாலை 7.45 மணியளவில் ஏடிஎம்மிற்கு சென்று ரூ. 8 ஆயிரத்தை எடுத்து உள்ளார். ஆனால் அவை அனைத்துமே போலி ரூபாய் நோட்டுகள் என அவர் குற்றம் சாட்டிஉள்ளார். இவ்விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தவே போலீசாரும் ஏடிஎம்மில் சோதனை செய்து உள்ளனர். அப்போது போலி ரூபாய் நோட்டுகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்திற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது தெரியவரவில்லை, வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரிக்கப்பட்டு வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

எஸ்.பி.ஐ. வங்கியும் இவ்விகாரம் தொடர்பாக விசாரிக்க குழுவை அனுப்பி உள்ளதாக தெரிவித்து உள்ளது. 


Next Story