கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளை மூடவேண்டும்


கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளை மூடவேண்டும்
x
தினத்தந்தி 22 Feb 2017 11:30 PM GMT (Updated: 22 Feb 2017 11:01 PM GMT)

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்று மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்று மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கழிவுநீரால் பாதிப்பு

தொழிற்சாலைகளின் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், கழிவுநீர் கலப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாகவும் எனவே அனைத்து தொழிற்சாலைகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியை ஏற்படுத்தவேண்டும் என உத்தரவிடக்கோரி குஜராத்தைச் சேர்ந்த பர்யவரண் சுரக்ஷா சமிதி என்னும் தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதே பிரச்சினை பெரும்பாலான மாநிலங்களில் காணப்படுவதால் சுப்ரீம் கோர்ட்டு 19 மாநிலங்களை இந்த வழக்கில் இணைத்துக்கொண்டு விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக மத்திய அரசு, மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம், 19 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் ஏற்கனவே அனுப்பியது.

இப்பிரச்சினை தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சஞ்சய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அவை வருமாறு:–

மூடவேண்டும்

சட்டவிதிகளின்படி தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இருக்கவேண்டும் என்பது கட்டாயம் ஆகும். எனவே, தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியை அமைத்து உள்ளனவா? என்பதை உறுதி செய்வதற்கு அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவேண்டும்.

இந்த நோட்டீஸ் அனுப்பி 3 மாதங்கள் முடிந்தபிறகு, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். இவ்வசதி இல்லாத தொழிற்சாலைகளை இயங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவற்றை மூடவேண்டும்.

இதுபோல் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளிடம், உங்களுக்கு ஏன் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வினியோகம் செய்வதை துண்டிக்கக்கூடாது என்று கேட்கவும் வேண்டும்.

அறிக்கை தாக்கல்

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாத தொழிற்சாலைகளில் இந்த வசதியை ஏற்படுத்திய பிறகுதான் அவை இயங்குவதற்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் அனுமதிக்கவேண்டும்.

உள்ளூர் மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியை 3 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தவேண்டும். இதற்காக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகள், தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு தங்களது அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறி உள்ளனர்.


Next Story