டெல்லியில் சோனியா, ராகுல்காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


டெல்லியில் சோனியா, ராகுல்காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 25 Feb 2017 12:00 AM GMT (Updated: 24 Feb 2017 10:15 PM GMT)

டெல்லியில் சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்

புதுடெல்லி,

டெல்லியில் சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி உடல்நலம் குறித்து இருவரும் விசாரித்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சோனியாகாந்தியுடன் சந்திப்பு

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் பற்றி ஜனாதிபதியிடம் புகார் அளிப்பதற்காக நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

பின்னர் நேற்று அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் உடன் இருந்தார். மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

முரண்பட்ட கருத்துகள்

பின்னர் மு.க.ஸ்டாலின் தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:–

சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர்களும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை.

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கும், பின்னர் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்த பதில்களுக்கும் முரண்பட்ட கருத்துகள் உள்ளன.

தேர்வு ஆணையத்தில் முறைகேடுகள்

எனவேதான், ஜெயலலிதா மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தில் இன்னும் பல முறைகேடுகள் நடந்து உள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அவை சரி செய்யப்படும்.

இந்த மாற்றத்தை எந்த அளவுக்கு விரைவாக எதிர்பார்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு விரைவாக ஏற்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.


Next Story