மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: மகனின் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய முடியாத சோகத்தில் குடும்பம்


மருத்துவர்கள் வேலைநிறுத்தம்:  மகனின் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய முடியாத சோகத்தில் குடும்பம்
x
தினத்தந்தி 23 March 2017 2:05 PM GMT (Updated: 23 March 2017 2:05 PM GMT)

மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தினால் குடும்பத்தினர், மரணமடைந்த தங்களது மகனின் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மகாராஷ்டிராவில் அவுரங்காபத் நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பாண்டே.  இவர் கடந்த 20ந்தேதி மாரடைப்பினால் மரணமடைந்து விட்டார்.  அதற்கு முன் தனது கண்களை கொடையாக அளிக்க அவர் முடிவு செய்து இருந்துள்ளார்.

இந்த நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் சக மருத்துவரை தாக்கி விட்டனர் என கூறி கடந்த 4 நாட்களாக இளநிலை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை பணிக்கு திரும்பும்படி, முதல் மந்திரி பட்னாவிஸ் மற்றும் மும்பை உயர் நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் ராஜேந்திர பாண்டேவின் இறுதி ஆசையை அவரது குடும்பத்தினரால் பூர்த்தி செய்ய முடியாத சோகநிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அவரது சகோதரர் சந்தேஷ் பாண்டே கூறும்பொழுது, மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்யவில்லை என்றால் எனது சகோதரர் ராஜேந்திரனின் கண்கள் கொடையாக அளிக்கப்பட்டு இருக்கும்.  சிலர் இந்த உலகினை காண முடிந்திருக்கும் என கூறினார்.

அவர் தொடர்ந்து, இதுவரை 50 பேரின் கண்களை கொடையாக அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.  எனினும், எனது சகோதரர் விசயத்தில் மருத்துவர்கள் போராட்டத்தினால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.

எனது சகோதரர் இறந்த பின்னர், அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை அணுகினோம்.  ஒரு மருத்துவர் கொடை அளிக்க உதவ முன் வந்து அனைத்து விசயங்களுக்கும் தயாரானார்.  எனினும், மற்ற மருத்துவர்கள் அங்கு வந்து, வேலை நிறுத்தத்தில் நாங்கள் இருக்கிறோம் என கூறி அவரையும் அழைத்து சென்று விட்டனர் என கூறியுள்ளார்.

இந்த புகார் பற்றி கேட்டதற்கு மருத்துவமனையின் பொறுப்பு டீன் அஜித் டாம்லே, இதுபோன்ற தகவல் எதுவும் எனக்கு வரவில்லை என கூறியுள்ளார்.

Next Story