எல்.கே.அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு


எல்.கே.அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 23 March 2017 10:30 PM GMT (Updated: 23 March 2017 8:21 PM GMT)

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி சிறப்பு கோர்ட்டு அத்வானி உள்ளிட்ட 13 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அத்வானி உள்ளிட்டோரை விடுவித்ததை ஏற்க முடியாது என கடந்த 6–ந் தேதி அறிவித்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது.

நீதிபதிகள் பி.சி.கோஸ், ஆர்.எப்.நாரிமன் ஆகியோரை அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பா.ஜனதா தலைவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால், மற்றொரு அமர்வு முன் நடந்து வரும் வேறொரு வழக்கில் தனக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 2 வாரத்துக்கு அதாவது அடுத்த மாதம் (ஏப்ரல்) 7–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் 6–ந் தேதிக்குள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story