வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.2,014.45 கோடி மத்திய அரசு ஒதுக்கியது


வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.2,014.45 கோடி மத்திய அரசு ஒதுக்கியது
x
தினத்தந்தி 23 March 2017 11:30 PM GMT (Updated: 23 March 2017 8:29 PM GMT)

தமிழகத்துக்கு வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,014 கோடியே 45 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

புதுடெல்லி

தமிழகத்துக்கு வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,014 கோடியே 45 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

வறட்சி நிவாரணம்

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதில் ரூ.2,500 கோடியை உடனடியாக வழங்கவும் கோரிக்கைவிடப்பட்டது.

தமிழக வறட்சி நிலைமையை மத்திய குழுவினர் கடந்த ஜனவரி மாதம் 22–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை பார்வையிட்டனர். தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096.80 கோடி வழங்க மத்திய குழு பரிந்துரை செய்தது.

வார்தா புயல் நிவாரணம்

அதேபோல கடந்த ஆண்டு இறுதியில் வார்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. புயல் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்கு ரூ.22,573 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாகவும் ஏற்கனவே மத்திய குழு பார்வையிட்டு பரிந்துரை வழங்கி இருந்தது.

டெல்லியில் நேற்று தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர் மற்றும் வறட்சி தொடர்பாக மத்திய குழு பார்வையிட்டு வழங்கிய பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் வேளாண்மை துறை மந்திரி ராதாமோகன் சிங் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ரூ.2,014.45 கோடி ஒதுக்கீடு

இதில் தமிழகத்துக்கு வார்தா புயல் நிவாரண நிதியாக ரூ.266.17 கோடியும், வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடியும் என மொத்தம் ரூ.2,014.45 கோடி ஒதுக்கப்பட்டது.

வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கேட்டதற்கு மத்திய அரசு ரூ.1,748.28 கோடியே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story