ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. விமானத்தில் பயணிக்க தடை விதிப்பு


ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. விமானத்தில் பயணிக்க தடை விதிப்பு
x
தினத்தந்தி 24 March 2017 8:26 AM GMT (Updated: 24 March 2017 8:25 AM GMT)

ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஏர்இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிக்க முடியாத ஆத்திரத்தில், ஏர் இந்தியா மேலாளர் சிவகுமாரை (வயது 60) அடித்து சட்டையை கிழித்தார் எம்.பி.. மூக்கு கண்ணாடியையும் நொறுக்கினார். தனது செருப்பால், மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 தடவை அடித்தார். இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிவசேனா எம்.பி.யின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

இச்சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்ய ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்தது. அத்துடன், இதுபற்றி விசாரித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்பட்டது. எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தவறான முறையில் நடந்துக் கொண்டதும் ஏர் இந்தியா பெண் ஊழியர் “சார் நீங்கள் எங்களுடைய ரோல் மாடல் இல்லையா... நீங்கள் எங்களுடைய பிரதிநிதி, நீங்கள் ஜனநாயகத்தின் தலைவர், நாங்கள் உங்களை தேர்வு செய்து உள்ளோம், “ என மன்றாடுகிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. 

இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என டெல்லி போலீசுக்கு சவால் விடுத்தார். நான் மன்னிப்பு தெரிவிக்க மாட்டேன், ஏர் இந்தியா மேலாளர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும். 60 வயது நபருக்கு எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என தெரிய வேண்டும், என்னுடைய கட்சி எனக்கு துணையாக நிற்கும் என கூறினார் ரவீந்திர கெய்க்வாட். இவ்விவகாரம் தொடர்பாக இதுவரையில் சிவசேனா எந்தஒரு கருத்தும் வெளியிடவில்லை.

ஏர்இந்தியா மேலாளரை சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தாக்கிய நிலையில் “அவருடன் இனி பயணிக்க கூடாது,” என விமான நிறுவனங்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியது. இன்று ஏர்இந்தியா விமானத்தில் புனே திரும்புவதற்கு ரவீந்திர கெய்க்வாட் டிக்கெட் எடுத்து இருந்தார். இந்நிலையில் ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது உடனடியாக அமலுக்கு வருகிறது. சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்  விமானத்தில் செல்ல தடை விதிப்பதாக  இந்திய விமான நிறுவன கூட்டமைப்பு கூட்டாக அறிவித்து உள்ளது.

ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் புனேவிற்கு திரும்ப எடுத்து இருந்த டிக்கெட்டை ஏர்இந்தியா நிறுவனம் ரத்து செய்தது என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

Next Story