யோகி ஆதித்யநாத்துடன் முலாயம் சிங் யாதவின் மருமகள், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சந்திப்பு


யோகி ஆதித்யநாத்துடன் முலாயம் சிங் யாதவின் மருமகள், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சந்திப்பு
x
தினத்தந்தி 24 March 2017 10:41 AM GMT (Updated: 24 March 2017 10:41 AM GMT)

யோகி ஆதித்யநாத்தை முலாயம் சிங் யாதவின் மருமகள், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அடுத்தடுத்து சந்தித்து பேசியது உ.பி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லக்னோ,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்ணா இன்று சந்தித்து பேசினார்.  லக்னோவில் உள்ள விவிஐபி விருந்தினர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு மரியாதை நிமித்தமாக முதல் மந்திரியை சந்தித்ததாக  அபர்ணா தெரிவித்தார். 

லக்னோகண்ட் சட்டபேரவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில்  போட்டியிட்ட அபர்ணா யாதவ் தோல்வி அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி  கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் அபர்ணா யாதவ்  பங்கேற்றது நினைவில் இருக்கலாம்.

அதேபோல் பகுஜன் சமாஜ்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்வீர் உபத்யாவும் இன்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.  முதல் மந்திரியை பார்க்க செல்லும் போது செய்தியாளர்களை  சந்திப்பதை தவிர்த்த உபாத்யயா,  சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறுகையில்,  எனது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது தொடர்பாக முதல் மந்திரியை சந்தித்து பேசியதாகவும் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் முதல் மந்திரி கூறியிருப்பதாகவும்  தெரிவித்தார். 

முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் பிரதான கட்சியை சேர்ந்த இரு தலைவர்களும் அடுத்தடுத்து சந்தித்து பேசியது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.

Next Story