இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதல் தெரேசா மேவிடம், பிரதமர் மோடி பேச்சு


இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதல் தெரேசா மேவிடம், பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 24 March 2017 2:38 PM GMT (Updated: 24 March 2017 2:38 PM GMT)

இங்கிலாந்தில் பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து  பாராளுமன்ற கட்டிடம், லண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே ஒரு பயங்கரவாதி காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று மக்கள்மீது சரமாரியாக மோதித் தள்ளினார்.   இந்த சம்பவத்தால் நிலைகுலைந்த மக்கள் பீதியில் பாராளுமன்றத்தை நோக்கி ஓடினர். அதைத் தொடர்ந்து கார், தடுப்புச்சுவரில் மோதி நின்றது. அதைத் தொடர்ந்து அந்த பயங்கரவாதி, பாராளுமன்ற நுழைவாயிலை நோக்கி கையில் கத்தியுடன் ஓடி வந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்த முயற்சித்தார். அவரை, அவர் கத்தியால் குத்தி விட்டு மேலும் முன்னேறினார்.

பாராளுமன்ற வளாகத்தில் அவர் அத்துமீறி நுழைந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரிகள் அவரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார். 30–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.   இந்த தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை தெரிவித்தார். அந்நாட்டு பிரதமர் தெரசா மேவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி பாராளுமன்ற தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த தருணத்தில் இந்தியா இங்கிலாந்துடன் ஒற்றுமையுடன் செயல்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Next Story