விமான ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.பி கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு


விமான ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.பி கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு
x

விமான ஊழியரை தாக்கியது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன ஊழியர் அளித்த புகாரின் பேரில் சிவசேனா எம்.பி. கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இவர், விமானத்தில் உயர் மதிப்பு கொண்ட பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்து இருந்தார். ஆனால், அவருக்கு குறைந்த மதிப்பு கொண்ட எக்கனாமிக் கிளாஸ் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதனால் கோபம் அடைந்த ரவீந்திர கெய்க்வாட் டெல்லி சென்றதும் விமானத்தில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் சிவக்குமார் நேரில் சென்று சமாதானப்படுத்த முயன்றார்.ஆனால், கடும் கோபத்தில் இருந்த ரவீந்திர கெய்க்வாட் மேலாளர் சிவக்குமாரை செருப்பால் பல முறை அடித்தார். மேலும் சட்டையை கிழித்தார். அவரது மூக்கு கண்ணாடியையும் உடைத்து எறிந்தார்.

இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்தது. தொடர்ந்து கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும், கெய்க்வாட் விமானத்தில் செல்ல தடைவிதிப்பதாக இந்திய விமான நிறுவன கூட்டமைப்பு கூட்டாக அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் தாக்கியது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவன ஊழியர் அளித்த புகாரின் பேரில் சிவசேனா எம்.பி கெய்க்வாட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏர் இந்தியா மீது சிவசேனா எம்.பி ரவீந்தர கெய்க்வாட் புகார் அளித்துள்ளார். விமான டிக்கெட் மறுக்கப்பட்டதால் ரயில் மூலமாக கெய்க்வாட் மும்பை புறபட்டார்.

Next Story