குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடையா?


குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடையா?
x
தினத்தந்தி 24 March 2017 11:45 PM GMT (Updated: 24 March 2017 8:42 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வழக்கு

சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவர் கூறியுள்ள முக்கிய கோரிக்கைகள்:–

* குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்.

* தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிக்க வேண்டும்.

* எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிகபட்சம் எத்தனை வயது வரை பதவி வகிக்கலாம் என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

* எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளில் விசாரணை நடத்துவதற்கு தனிக்கோர்ட்டுகள் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது.

தேர்தல் கமி‌ஷன் ஆதரவு

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கவும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளில் தனிக்கோர்ட்டு அமைக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஆதரவு தெரிவித்தது.

தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிப்பது குறித்து பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும், இது தொடர்பாக அரசியல் சாசனத்தை திருத்த வேண்டியது வரும் என கூறியது.

நீதிபதிகள் உத்தரவு

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குதாரர் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி வாதாடினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசின் பதில் மனு தயாராக உள்ளது. அடுத்த சில தினங்களில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

அப்போது நீதிபதிகள், இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் தந்து உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் 18–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story