நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? டெல்லியில்  அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 25 March 2017 12:00 AM GMT (Updated: 24 March 2017 8:42 PM GMT)

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி கூறி இருப்பதாக, டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறி இருப்பதாக, டெல்லியில் நேற்று அவரை சந்தித்து பேசிய பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நீட்’ தேர்வு

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ்–2 மதிப்பெண்களின் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

இந்த கல்வி ஆண்டு முதல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்களை, தேசிய அளவில் தகுதி நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மாணவர்கள் சேர்க்கைக்காக நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வை வருகிற மே மாதம் 7–ந்தேதி நடத்த இருக்கிறது. இந்த ஆண்டு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் இந்த நுழைவுத்தேர்வை எழுதுகிறார்கள். இது கடந்த ஆண்டை விட 41.42 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த தேர்வு முடிவு ஜூன் 8–ந்தேதி வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் மேலும் 3 நகரங்கள்

முன்பு இந்தியா முழுவதும் 103 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கூடுதலாக மேலும் 23 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார். நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மிகவும் அதிகரித்து இருப்பதால் கூடுதல் நகரங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அப்போது அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, சேலம், திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய மேலும் 3 நகரங்களிலும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து இருக்கிறார்.

தமிழகம் கோரிக்கை

நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஏற்கனவே டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு

இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் மந்திரி ஜே.பி.நட்டாவை மீண்டும் சந்தித்து பேசினார். அவருடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்று இருந்தனர். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஜே.பி.நட்டாவிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பின்னர் மாலையில் மத்திய சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தனர்.

அதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

முதுநிலை மருத்துவ படிப்பு

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மத்திய அரசை நாங்கள் சந்திப்பது தொடர்ந்து வருகிறது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்று முதுநிலை மருத்துவ படிப்புக்கானது, மற்றொன்று இளநிலை படிப்புக்கானது.

முதுநிலை மருத்துவ படிப்பு பிரச்சினையை பொறுத்தமட்டில், கிராமப்பகுதியில் பணி புரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரக்கூடிய சலுகைகளை தொடர்ந்து வழங்குவதற்கு ஏதுவாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்திய அரசு உரிய ஒப்புதல் வழங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தெரிவித்தார்.

விலக்கு கிடைக்குமா?

அதே நேரத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைத்தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான மற்றொரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதை தெரிவித்து, அதற்கு ஒப்புதலை பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதற்கு கூடுதலான சட்ட விவரங்களை ஜே.பி.நட்டா கேட்டதால், அந்த விவரங்களையும் வழங்கி இருக்கிறோம்.

இந்த விவகாரம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க பரிசீலிக்கப்படும் என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்கும். அதற்கான முயற்சியில் தொடர்ந்து நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்தோம். அவரும் ஆவன செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

கல்வி தரத்தை உயர்த்த இவை போன்ற தேர்வுகள் கட்டாயம் தேவை. அதே நேரத்தில் தமிழக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக ஒரு சில ஆண்டுகள் வேண்டுமானால் விலக்கு அளிக்கலாம். தமிழக அரசும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு இணையாக மாநில கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தையும் உயர்த்தவேண்டும். அந்த மாணவர்களின் வசதிக்காக தமிழிலும் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு விலக்கு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு இறங்கி உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. என்றாலும் மாணவர்கள் அதனையே நம்பி தேர்வுக்கு தயாராவதை கைவிடக் கூடாது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story