சிவசேனா எம்.பி. ரெயிலில் மக்களுக்கு பயந்து இடையில் இறங்கினார்


சிவசேனா எம்.பி. ரெயிலில் மக்களுக்கு பயந்து இடையில் இறங்கினார்
x
தினத்தந்தி 26 March 2017 6:18 AM GMT (Updated: 26 March 2017 6:17 AM GMT)

ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரெயிலில் மும்பைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு பயந்து இடையில் இறங்கினார்.

மும்பை, 

மராட்டியத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா விமானத்தின் ‘பிசினஸ்’ வகுப்பில் டெல்லி செல்வதற்கான டிக்கெட் வைத்திருந்தார். 23-ம் தேதி காலையில் டெல்லி செல்ல புனே விமான நிலையத்துக்கு வந்தபோது, ‘எகனாமி’ வகுப்பு கொண்ட விமானம் மட்டுமே இருந்தது. எனினும் அதில் பயணம் செய்த அவர் விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கியதும் விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

 இதையறிந்து அங்கு வந்த ஏர் இந்தியா மேலாளர் சுகுமார் (வயது 60), கெய்க்வாட் எம்.பி.யை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கெய்க்வாட், மேலாளரை தாக்கி அவரது சட்டையை கிழித்தார். மேலும் அவரது கன்னத்தில் 25 முறை செருப்பால் அடித்தார். இதில் அவரது மூக்கு கண்ணாடியும் உடைந்தது. டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சிவசேனா கட்சித்தலைமையும் அவருக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்த மோசமான செயலில் ஈடுபட்ட கெய்க்வாட் எம்.பி.க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விமான நிறுவனங்கள், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன. அதன்படி கெய்க்வாட் எம்.பி.யை தனது விமானத்தில் அனுமதிக்க தடை விதித்து ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதைப்போல ‘இண்டிகோ’, ‘ஸ்பைஸ்ஜெட்’, ‘கோ ஏர்’, ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆகிய தனியார் விமான நிறுவனங்களும் அவருக்கு தடை விதித்து உள்ளன. இந்த நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்ட ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

‘பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், ஊழியர்களின் மன உறுதியை தக்க வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என கெய்க்வாட் எம்.பி. கூறினார்.  

இதை தொடர்ந்து சிவசேனா எம்.பி.க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’  தடை காரணமாக அவர் டெல்லியில் இருந்து புனேக்கு விமானத்தில் திரும்ப முடியாமல் தவித்தார். கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவசேனா எம்.பி. டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டார். அவர் பற்றிய தகவல் நாடு முழுவது பரவி இருந்ததால் ரெயிலில் அமைதியாக பயணம் செய்தார். யாருடனும் பேசாமல் இருந்தார். அவர் எதுவும் சாப்பிடவில்லை. டீ மட்டுமே வாங்கி குடித்தார். மும்பைக்கு முன்பே இறங்கினார். சிவசேனா எம்.பி. மும்பை வரை டிக்கெட் பதிவு செய்திருந்தார். ஆனால் பொதுமக்கள் மற்றும் மீடியாவுக்கு பயந்து அவர் மும்பைக்கு முன்பே ரெயிலில் இருந்து இறங்கி சென்றார்.

குஜராத் மாநிலம் வாபி ரெயில் நிலையத்தில் அவர் இறங்கினார். இது மும்பையில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து அவர் கார் மூலம் சென்றதாக கூறப்படுகிறது. அவர் மும்பை சென்றாரா? அல்லது உஸ்மானியாபாத் சென்றாரா என்பது தெரிய வில்லை.

Next Story