ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்து - தகவல்


ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்து - தகவல்
x
தினத்தந்தி 26 March 2017 12:57 PM GMT (Updated: 26 March 2017 12:57 PM GMT)

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


புதுடெல்லி,

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்திலும் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக, நெடுவாசல் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்தது, அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாது என அரசுக்கள் தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன. 

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதிலும் நிலப்பகுதி மற்றும் கடல்பகுதிக்கு அடியில் இயற்கை வளமான ஹைட்ரோகார்பன் (நீரக கரிசேமம்) இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் ஆயில், காஸ் ஹைட்ரேட், தார் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வளங்களுக்கான இந்த ஆய்வை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் செய்திருந்தன. இந்த நிறுவனங்களால் பல ஆண்டு களுக்கு முன்பே இந்த இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எடுக்க முடியாமல் கடந்தகால மத்திய அரசுகள் விட்டு வைத்தன. 

இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் அவற்றை எடுக்க முடிவு செய்தது. அசாமில் 9, குஜராத்தில் 5, தமிழகத்தில் ஒன்று, புதுச்சேரியில் ஒன்று, ஆந்திராவில் 4, ராஜஸ்தானில் 2, மும்பை கடல் பகுதியில் 6, மத்தியபிரதேசம், கட்ச் கடல்பகுதி, கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகை ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 31 இடங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. நெடுவாசல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக டெல்லியில் ஜெம் லெபோரட்ரீஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு நாளை கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story