ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து


ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 28 March 2017 12:00 AM GMT (Updated: 27 March 2017 9:53 PM GMT)

நெடுவாசல், காரைக் கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், 22 நிறுவனங்களுக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுடெல்லி,

நெடுவாசல், காரைக் கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும், 22 நிறுவனங்களுக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. நெடுவாசல் பகுதியில் மக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.

போராட்டம்

அசாம் மாநிலத்தில் 9 இடங்கள், குஜராத்தில் 5 இடங்கள், ஆந்திராவில் 4 இடங்கள், ராஜஸ்தானில் 2 இடங்கள், மும்பை கடல் பகுதியில் 6 இடங்கள் மற்றும் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதி, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட நாடு முழுவதும் 31 இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. போராட்ட குழுவினர் டெல்லி சென்று பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக மனு அளித்தனர்.

ஒப்பந்தங்கள்
கையெழுத்து

இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்கள் டெல்லியில் நேற்று பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாயின.

மத்திய அரசுக்கும், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள 22  நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இவற்றில் 17 நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள். 4 நிறுவனங்கள் பொதுத்துறையைச் சேர்ந்தவை. ஒரு நிறுவனம் வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஆகும்.

மத்திய பெட்ரோலிய அமைச்சக செயலாளர் கே.டி.திரிபாதி, மூத்த அதிகாரிகள் மற்றும் இத்திட்டத்துக்காக மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற நிறுவனமான ஜெம் லேபரட்டரிஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும் மந்திரி தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மாநில அரசு அனுமதி

இந்த திட்டத்தினால் அரசுக்கு தோராயமாக ரூ.46 ஆயிரத்து 400 கோடி வருமானம் கிடைக்கும். ஒப்புதல் வழக்கப்பட்ட திட்டப்பணிகள் மூலமாக இந்தியா முழுவதும் சுமார் 37 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளும். திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடமும் ஆலோசனைகள் நடத்தப்படும். உள்ளூர் மக்களின் நலன்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  

மாநில அரசு உள்ளூர் மக்களின் சந்தேகங்களை போக்கி உரிய அனுமதி வழங்கிய பிறகே இந்த திட்டம் நிறைவேற்றப்படும். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே நெடுவாசல் போராட்ட குழுவினருடன் வந்து என்னை சந்தித்தனர். நெடுவாசல் மக்களின் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று போராட்ட குழுவினரிடம் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்புதல் பெற்ற ஜெம் லேபரட்டரி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஹரிபிரசாத் கூறியதாவது:–

உள்ளூர் மக்களுக்கு வேலை

எங்கள் நிறுவனம் சார்பாக நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளிடம் இருந்து சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலம் தேவைப்படும். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அங்கே நாங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாது. நாங்கள் அங்கே எங்கள் பணிகளை தொடங்க தமிழக அரசிடம் இருந்தும் ஒப்புதல் பெற்றாக வேண்டும். மாநில அரசின் ஒத்துழைப்பு மற்றும் நெடுவாசல் மக்களின் ஒத்துழைப்பு இன்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது.  

இந்த திட்டத்தால் எங்கள் நிறுவனம் மட்டும் பயன் பெறப்போவது இல்லை. மக்களும் அதிக பலன்களை பெறுவார்கள். இத்திட்டத்தின் மூலம் அங்கே வேலைவாய்ப்பு உருவாகும். உள்ளூர் மக்கள் சுமார் 500 பேரை பணியில் அமர்த்த வேண்டும். தொழில்நுட்பம் தேவைப்படும் உயர்மட்ட பணிகளில் உள்ளூரில் ஆட்கள் கிடைத்தால் அவர்களை நாங்கள் பயன்படுத்துவோம். இல்லையென்றால் மட்டுமே தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்தும் பணியாளர்களை தேர்வு செய்வோம்.

இவ்வாறு ஹரிபிரசாத் கூறினார்.

Next Story