உயிருடன் எலியை வாயில் கவ்வி தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்


உயிருடன் எலியை வாயில் கவ்வி  தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2017 12:00 AM GMT (Updated: 27 March 2017 10:04 PM GMT)

டெல்லியில் உயிருடன் எலியை வாயில் கவ்வி தமிழக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தி வரும் தொடர் போராட்டம் நேற்று 14-வது நாளாக நீடித்தது.

இதில் பங்கேற்கும் தமிழக விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராடி வருகின்றனர். இதனால் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர் கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மத்திய மந்திரியும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி, டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

உயிருடன் எலிகளை கவ்வினர்

நேற்று தமிழக விவசாயிகள் உயிருடன் எலிகளை பிடித்து வைத்து வாயில் கவ்விக் கொண்டு எலிகள் உண்ணும் போராட்டம் என அறிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வறட்சியால் தமிழக விவசாயிகள் உணவு உண்பதற்கு அரிசி கிடைக்காததால் எலியை சாப்பிட நேரிடும் என்பதை உலகுக்கு காட்ட இன்று(நேற்று) நாங்கள் எலியை உண்ணும் போராட்டம் நடத்துகிறோம்” என்று போராட்டக் குழு தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி சிவா வலியுறுத்தல்

இந்தநிலையில் நேற்று தமிழக விவசாயிகள் சார்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்துக்கு ரூ.2,014 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதால், இதற்கு மேல் ஒதுக்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று அருண் ஜெட்லி தெரிவித்தார். அதற்கு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு ஆவன செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்” என்றார். 

Next Story