டெல்லியில் விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிட தம்பிதுரை- தமிழக அமைச்சர் நேரில் வலியுறுத்தல்


டெல்லியில் விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிட தம்பிதுரை- தமிழக அமைச்சர் நேரில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 March 2017 7:56 AM GMT (Updated: 28 March 2017 7:56 AM GMT)

டெல்லியில் 15 நாட்களாக போராட்டம்ந் நடத்திவரும் விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிட தம்பிதுரை- தமிழக அமைச்சர் நேரில் வலியுறுத்தினர்.

புதுடெல்லி

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உடனடியாக தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலைக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டத்தை முன்னெ டுத்து செல்கிறார்கள்.

கழுத்தில் தூக்கு கயிற்றை தொங்க விட்டு போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சடலமாக நடித்து காட்டியும் தங்களது  எதிர்ப்பை தெரிவித்தனர். சாப்பாட்டுக்கு கூட தங்களுக்கு வழியில்லை என்பதை உணர்த்தும் வகையில் எலிக்கறி சாப்பிட போவதாக கூறிய விவசாயி கள் எலியை வாயில் கவ்வியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2 வாரங் களையும் கடந்து நீடிக்கும் விவசாயிகள் போராட்டத் துக்கு இளைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதில் ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல இளைஞர் கள் அனைவரும் விவசாயிகளை காக்க ஒன்று கூட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளை தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர்  இன்று சந்தித்து பேசினர். அப்போது, தங்களது போராட்டத்துக்கான கோரிக்கைகளை அவர்களிடம், போராட்டத்தை  ஒருங்கிணைத்து இருக்கும் அய்யாக்கண்ணு எடுத்துக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 'விவசாயிகளின் பிரச்னையை கேட்டறிந்தோம். உள்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்களிடம் தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள நிவாரணம் போதாது என்று எடுத்துக் கூறியுள்ளோம். மீண்டும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை எடுத்துக் கூறயிருக்கிறோம். விவசாயம் இல்லாமல் யாரும் வாழ முடியாது. மத்திய அரசிடம் நாங்கள் காவிரி மேலாண்மை குறித்த பிரச்னையை கவனத்துக்குக் கொண்டு சென்றோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு அமல் செய்யப்படும் என்றனர்.விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமரிடம் மனு அளிப்போம் - தம்பிதுரை.

தமிழக அரசின் சார்பாகவே விவசாயிகளை சந்தித்து பேசினோம்

விவசாயிகள் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராடுவோம் போராட்டத்தை கைவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போராட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று விவசாயிகளைக் கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறினார்.

அமைச்சர் துரைக்கண்ணு, 'விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறோம். விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். தமிழக அரசு அரணாக இருந்து விவசாயிகளை காத்து வருகிறது. குடிநீருக்கே தமிழகம் கஷ்டப்பட்டு வரும் நிலையில், வறட்சிக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.


Next Story