மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!


மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!
x
தினத்தந்தி 29 March 2017 5:58 AM GMT (Updated: 29 March 2017 5:58 AM GMT)

உ.பி.யில் மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆன்டி-ரோமியோ படை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் செய்பவர்கள், பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் ஆன்டி-ரோமியோ படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் பெண்களுக்கு தொல்லை தருவோரை கைது செய்து தண்டனையும் அளித்து வருகிறார்கள். இப்படையை மாநிலம் முழுவதும் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே குடும்பத்துடன் வருபவர்களையும் போலீஸ் தாக்க நேரிடுகிறது என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

  இந்தப்படையினர், சில குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியது.

ராம்பூர் மாவட்டம் காஷ்மாத் காஞ்ச் கிராமத்தை சேர்ந்த வாலிபர் கடந்த மார்ச் 26-ம் தேதி தனது மாமன் மகளுடன் டவுனுக்கு மருந்து பொருட்கள் வாங்க சென்று உள்ளார். அப்போது வாலிபரையும், அவருடைய மாமன் மகளையும் பிடித்து போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். ஆன்டி-ரோமியோ ஆப்ரேஷன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவரும் சுமார் 5 மணிநேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் காவல் நிலையம் சென்று உள்ளனர். அப்போது இருவரையும் விடுவிக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுங்கள் என போலீசார் கேட்டு உள்ளனர். 

ரூ. 5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு அதனை உறவினர்கள் ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டனர். பின்னர் உள்ளூர் எம்.எல்.ஏ. பால்தேவ் சிங்கை சந்தித்து நிலை குறித்து முறையிட்டு உள்ளனர். அவர் எஸ்.பி.யிடம் பேசவே காவல் துறை நடவடிக்கையை தொடங்கியது. லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு தலைமை கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உ.பி. அரசின் ஆன்டி-ரோமியோ படை விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

Next Story