டெல்லியில் செத்த பாம்பை வாயில் கவ்விக் கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்


டெல்லியில் செத்த பாம்பை வாயில் கவ்விக் கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 29 March 2017 11:00 PM GMT (Updated: 29 March 2017 7:34 PM GMT)

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நேற்று, செத்த பாம்பை வாயில் கவ்விக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நேற்று, செத்த பாம்பை வாயில் கவ்விக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

தென்னிந்திய நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்தல், தமிழகத்துக்கு உரிய வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு குழுவின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் ஆதரவு

நேற்று 16–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. அப்போது விவசாயிகள் தங்கள் வாயில் செத்த பாம்பை கவ்விக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் நேற்று போராட்ட குழுவினரை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவு தெரிவித்தனர்.

உடல்நிலை பாதிப்பு

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திருச்சியை சேர்ந்த மகாதேவன் என்பவருடைய உடல்நிலை நேற்று திடீரென்று பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் அவரை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி, அருகில் உள்ள ராம் மனோகர் லோகிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து, போலீசார் அவரை மீண்டும் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு வந்து விட்டனர்.


Next Story