கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு மனைவி சாக்ஷி அம்பலப்படுத்தியதால் மத்திய மந்திரி நடவடிக்கை


கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு மனைவி சாக்ஷி அம்பலப்படுத்தியதால் மத்திய மந்திரி நடவடிக்கை
x
தினத்தந்தி 29 March 2017 11:30 PM GMT (Updated: 29 March 2017 7:39 PM GMT)

பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் குடும்பம் குறித்த ஆதார் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை டோனியின் மனைவி சாக்ஷியே அம்பலப்படுத்தினார்.

புதுடெல்லி,

பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் குடும்பம் குறித்த ஆதார் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை டோனியின் மனைவி சாக்ஷியே அம்பலப்படுத்தினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பொதுச் சேவை மையத்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

டோனியின் ஆதார் பதிவு

ஆதார் அட்டைக்காக பதிவு செய்யப்படும் தனிப்பட்ட நபரின் மற்றும் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்படும், அவை ரகசியமாக வைத்திருக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதை மீறும் விதமாக ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய வேதனையான சோதனை, வேறு யாருக்கும் அல்ல நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்குத்தான் ஏற்பட்டு உள்ளது. டோனியும் அவருடைய குடும்பத்தினரும் அண்மையில் ராஞ்சி நகரில் உள்ள பொதுச் சேவை மையத்துக்கு சென்று தங்களை பற்றிய ஆதார் தகவல்களை மேம்படுத்திக் கொண்டனர்.

ரகசியம் அம்பலம்

அப்போது அந்த பொதுச் சேவை மையத்தில் இருந்த ஊழியர் டோனியின் கைவிரல் பதிவுக்கு உதவி செய்தார். தவிர அவருடன் ஆர்வமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அத்துடன் நின்றிருந்தால் கூட பிரச்சினையில்லை. ஆதாருக்காக டோனி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் அவர் குடும்பம் பற்றிய ரகசிய தகவல்கள் அடங்கிய விண்ணப்பத்தையும் டுவிட்டர் பதிவில் வெளியிட்டு விட்டார்.

அதில் அவர் பெருமிதத்துடன் ‘‘ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிராம அளவிலான தொழில்முனைவு நிலையமான மரியா பரூக்கி பொதுச் சேவை மையத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் டோனியும், அவருடைய குடும்பத்தினரும் தங்களுடைய ஆதார் தகவல்களை மேம்படுத்திக் கொண்டனர்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மிச்சம் உள்ளதா?

இந்த செய்தி நாடு முழுவதும் ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த டோனியின் மனைவி சாக்ஷி ஆவேசம் அடைந்து டுவிட்டரில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

அதில், ‘‘விண்ணப்ப மனு உள்ளிட்ட ஆதார் அட்டை தகவல்கள் அனைத்தும் பொதுச் சொத்துபோல வெளியாகிவிட்டது. இனி எங்களைப் பற்றி வெளியிடுவதற்கு தனிப்பட்ட தகவல்கள் எதுவும் மிச்சம் உள்ளனவா?’’ என்று கோபத்துடன் கேட்டு இருந்தார்.

மத்திய மந்திரி உறுதி

சாக்ஷியின் இந்த டுவிட்டர் பதிவு மத்திய அரசு தனது உறுதிமொழியை மீறுவதாக அமைந்திருப்பதை வெளிப்படையாக குற்றம் சாட்டுவதுபோல் இருந்ததால் மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இதுபற்றி தான் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக சாக்ஷிக்கு உறுதி அளித்தார்.

அதேநேரம் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்ததற்காக சாக்ஷிக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார். ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வது சட்டவிரோதமானது. எனவே இந்த வி‌ஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்.

10 ஆண்டுகள் தடை

உடனடியாக இந்த தகவல் ஆதார் ஆணையத்தின் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுச் சேவை மைய ஊழியர், டோனி பற்றி வெளியிட்டு இருந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி அஜய் பூ‌ஷன் பாண்டே சில அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி டோனியின் குடும்பம் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்ட ராஞ்சி மரியா பரூக்கி பொதுச் சேவை மையம் 10 ஆண்டுகள் ஆதார் அட்டை விண்ணப்பங்களை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த மையம் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது.

பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை

இதுகுறித்து அஜய் பூ‌ஷன் பாண்டே கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட ஆதார் பொதுச் சேவை மையம் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் இது, தனிப்பட்ட தகவல்கள் பற்றிய விவகாரம். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு தகவல்கள் வெளியாவதற்கு காரணமாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மாநில அரசின் டுவிட்டர் கணக்குகள் மூலம் டோனி குறித்த ஆதார் தகவல்களை பரப்பியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

எனினும் டோனியின் மீது இருந்த ஆர்வக் கோளாறில் இந்த தவறை பொதுச் சேவை மைய ஊழியர் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story