ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் ரூ.2.5 லட்சமாக உயர்வு


ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் ரூ.2.5 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 3 April 2017 6:27 AM GMT (Updated: 3 April 2017 6:27 AM GMT)

ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் அடிப்படை சம்பளம் இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டு உள்ளது.

மும்பை,

ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் அடிப்படை சம்பளம் திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னரின் அடிப்படை சம்பளம் ரூ.90,000 லிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. துணை கவர்னரின் அடிப்படை சம்பளம் ரூ.80,000 லிருந்து 2.25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட சம்பளம் 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் தலைமை வங்கியாக செயல்படும் ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு பிற வங்கிகளின் முதன்மை அதிகாரிகளின் சம்பளத்தைவிட குறைவாகவே இருந்தது.

 இதன் காரணமாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பு அடிப்படை சம்பளம் 90,000 மாக இருந்ததால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலின் மொத்த சம்பளம் 2,09,500 ரூபாயாக இருந்தது. தற்போது அடிப்படை சம்பளம் உயத்தப்பட்டதால் மொத்த சம்பளம் 3.70 லட்ச ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் படேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தார். செப்டம்பர் மாதம் 4-ம் தேதி பதவியில் இருந்து விலகிய அவருக்கு இந்த விதி பொருந்துமா என்பது குறித்த விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜனுக்கு மாத சம்பளமாக ரூ.1.69 லட்சம் வழங்கப்பட்டது. பின்பு சம்பளம் மூன்று முறை திருத்தியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான ஆர்.டி.ஐ. கேள்விக்கு பதிலளித்து உள்ள ரிசர்வ் வங்கி விபரங்களை வெளியிட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பிப்ரவரி 21-ம் தேதி அறிவிப்பின்படி ரிசர்வ் வங்கி மற்றும் துணை கவர்னரின் சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது. ரகுராம் ராஜன் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி கவர்னராக பதவி ஏற்றபோது அவருக்கு ரூ. 1.69 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்பட்டது. பின்னர் 2014ம் ஆண்டு ரூ. 1.78 லட்சமாகவும், 2015ம் ஆண்டு ரூ. 1.87 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. அவருடைய சம்பளம் 2016 ஜனவரி மாதம் 2.04 லட்சத்தில் இருந்து 2.09 லட்சமாக உயர்த்தப்பட்டது.

Next Story