‘இந்தியாவின் வளமையை தமிழ் மொழி பறைசாற்றுகிறது’ நிதி ஆயோக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்


‘இந்தியாவின் வளமையை தமிழ் மொழி பறைசாற்றுகிறது’ நிதி ஆயோக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 24 April 2017 11:30 PM GMT (Updated: 24 April 2017 9:27 PM GMT)

இந்தியாவின் வளமையை தமிழ் மொழி பறைசாற்றுகிறது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில், மாநில முதல்–அமைச்சர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;–

சர்தார் படேல் பிறந்தநாளை முன்னிட்டு நாம் ஒரு முக்கியமான விசயத்தை கையில் எடுக்க வேண்டும். அது தான் ‘‘ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்’’ என்ற அவரது தாரக மந்திரம். பன்முகத்தன்மை கொண்ட நாடாக நமது இந்தியா திகழ்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை பலப்படுத்தும் விசயங்களில் நாம் நிரந்தரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனை எப்படி பலப்படுத்துவது என்று ஆராய வேண்டும். இந்த பன்முகத்தன்மையில் நாம் ஒற்றுமையை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்று பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம் உணர்கிறோம், ஒரே தேசத்தில் நாம் வசித்தாலும் நாம் அந்நியனாக உணர்கிறோம். நமது பாரம்பரியம் கலாசாரம் பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம். எனவே மாநிலங்களை நாம் கேட்டுக் கொள்கிறோம், ஒரு மாநிலம் மற்ற மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ஜோடி சேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக மாணவர்களுடன்...

உதாரணத்திற்கு தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் வளமையான மொழி. தொன்மை வாய்ந்த மொழி. நான் மனதார சொல்கிறேன்.

இந்தியாவின் வளமையை பறைசாற்றுவதற்கு தமிழ் மொழியை குறிப்பிடலாம். ஆனால் தமிழ்மொழியைப்பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. ஏன் நமது மாநிலங்களில் ஏதாவது ஒன்று தமிழக அரசுடன் ஓராண்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது?.

இங்கிருந்து மாணவர்களுக்கு தமிழ் பாடல்களை கற்றுக்கொள்ளலாமே? 100 வாக்கியங்களை கற்றுக்கொள்ளலாமே? தமிழ் எழுத்துகளை அறிந்துகொள்ளும் வகையில் கற்றுக்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழி செய்யலாமே? அவ்வப்போது திரைப்பட விழாக்களை நடத்தலாம். எப்போதாவது தமிழக மாணவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். அந்த மாநிலத்தின் மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்லலாம்.

இந்தியாவில் ஏராளமான மாநிலங்கள் உள்ளன. ஒன்றுக்கொன்று வித்தியாசமான மாநிலங்களாக அவை திகழ்கின்றன. இவை ஒன்றோடு ஒன்று கூட்டு சேரவேண்டும். எந்த மாநிலம் வேண்டுமானாலும் இன்னொரு மாநிலத்துடன் கூட்டு சேரலாம்.

தேசத்துக்கு மிக அவசியம்

அரியானா தெலுங்கானாவுடன் இணைந்து செயல்படுவது போல், குஜராத்துடன் சத்தீஷ்கர் இணைந்து செயல்படுவது போல், மேற்கு வங்கம், அசாமுடன் இணைந்து செயல்படுவது போல் இந்த முயற்சியை நாம் பலப்படுத்தி நம் நாட்டின் வளமையை பறைசாற்ற வேண்டும்.

இதை நாம் புறக்கணிக்கக்கூடாது. ஒரு முறை நாமும் இந்த மொழியை நாம் பேசும் போது, நாம் பேசக் கேட்கும் போது அதனை உணரும் போது நமக்கே வியப்பாக இருக்கும். அவர்கள் சொல்லும் கருத்தைத்தான் நாமும் சொல்கிறோம். ஆனால் அவர்கள் நமது மொழியைப் பேசுகிறார்கள் என்று வியப்படைவோம்.

எனவே ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் திட்டத்திற்கு பலம் சேர்க்க வேண்டும். வேற்றுமைகள் நிறைந்த நமது தேசத்திற்கு இது மிகவும் அவசியமாகும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

Next Story