டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்டி


டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்டி
x
தினத்தந்தி 25 April 2017 12:01 PM GMT (Updated: 25 April 2017 12:00 PM GMT)

கடந்த கால குற்ற பின்னணி அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கி உள்ளனர். டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது இடைத்தரகர் சுகேஷ் சந்திரா சேகர் திடீர் பல்டி அடித்துள்ளார்.


ரூ.50 கோடி பேரம் விவ காரத்தில் சிக்கிய முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் எவ்வளவு பெரிய ஆளையும் ஏமாற்றுவதில் கில்லாடி.ஆங்கிலத்தில் சரளமாக, அழகாக பேசும் திறமை படைத்த இவன், யாரிடம், எப்படி பேசினால் எளிதில் கவிழ்க்கலாம் என்ற வித்தை தெரிந்தவன். இவனது தேன் தடவிய வார்த்தைகளில் மயங்கி பணத்தை பறி கொடுத்தவர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர்.

அந்த வகையில் இவன் மீது நாடெங்கும் 50-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்தான் இவன் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர ரூ.50 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக அவன் வேறு ஒரு போலிபெயரில் டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசி இருக்கிறான். அப்போது அவன் தன்னை ஐகோர்ட்டு நீதிபதி என்று கூறி அறிமுகப் படுத்தி கொண்டிருக்கிறான்.அவனது உடை மற்றும்  ஆங்கில பேச்சை  கண்டு, ஐகோர்ட்டு நீதிபதிதான் வந்திருக்கிறார் என்று டி.டி.வி.தினகரன் நம்பி விட்டார்.

அவரிடம் சுகேஷ் சந்திர சேகர், “தலைமை தேர்தல் கமிஷனில் மூத்த அதிகாரிகள் 2 பேரை எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் இருவருக்கும் தலா ரூ.20 கோடி வீதம் ரூ.40 கோடி கொடுக்க வேண்டும்.  எனக்கு ரூ.10 கோடி தரவேண்டும். ஆக மொத்தம் ரூ.50 கோடி வேண்டும். நீங்கள் ரூ.50 கோடி தந்தால் உங்களுக்கு என்னால் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர முடியும்“ என்று கேட்டு இருக்கிறான்.

அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக டி.டி.வி.தின கரன் எப்படியும் ரூ.50 கோடி தந்து விடுவார் என்று சுகேஷ் சந்திரசேகர் எதிர்பார்த்து இருக்கிறான். ரூ.50 கோடி கிடைத்ததும் இதுவரை மற்றவர்களை ஏமாற்றியது போல டி.டி.வி.தினகரனையும் ஏமாற்றி விட வேண்டும் என்று சுகேஷ் சந்திரசேகர் திட்டமிட்டிருக்கிறான். இந்த தகவலை அவனே டெல்லி போலீசாரிடம் விசாரணையின்போது கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆனால் ரூ.50 கோடி பணம் கைமாறியதா என்று தெரியவில்லை. டி.டி.வி. தினகரன், “நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை” என்று தொடர்ந்து மறுத்து வருகிறார்.

என்றாலும் ரூ.10 கோடி கைமாறி  இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் இரட்டை இலை சின்னம் பெற பணம் பேரம் பேசப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. அது மட்டுமின்றி டி.டி.வி.தினகரனிடம் கோடிக்கணக்கில் பணத்தை கறந்து விட்டு ஏமாற்றி விட வேண்டும் என்று சுகேஷ் சாதுர்யமாக திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ரூ.1.3 கோடி பணத்துடன் அவன் சிக்கியதால் அனைத்தும் அம்பலமாகி விட்டது.
இல்லையெனில் டி.டி.வி. தினகரனை நம்ப வைத்து, நடித்து அவரிடம் இருந்து ரூ.50 கோடி பெற்று சுகேஷ் ஏமாற்றி இருப்பான் என்று விசாரணை நடத்தும் மூத்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

இன்று 4 வது நாளாக குற்றப்பிரிவு அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் தற்போது டிடிவி தினகரன் யார் என்றே தெரியாது என கூறி உள்ளார். டெல்லி நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்கலிடம் கூறியதாவது:-

என் மீதான வழக்குகளின் அடிப்படையில் என்னை கைது செய்துள்ளனர். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை. கடந்த கால குற்ற பின்னணி அடிப்படையில் என்னை பலிகடா ஆக்கி உள்ளனர். டிடிவி தினகரன் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறி உள்ளார்.

Next Story