ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலை சலுகைகள் மேலும் 18 மாதங்களுக்கு தொடரும்


ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலை சலுகைகள் மேலும் 18 மாதங்களுக்கு தொடரும்
x
தினத்தந்தி 26 April 2017 10:43 AM GMT (Updated: 26 April 2017 10:42 AM GMT)

ரிலையன்ஸ் ஜியோ இலவசங்களை தொடர்ந்து கட்டண சேவைகளும் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற மலிவு விலை சலுகைகள் மேலும் சில மாதங்களுக்கு ஜியோ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மும்பை


ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மலிவு விலையில் திட்டங்களை வழங்கும் பானியை மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு தொடரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் 15 சதவிகித வயர்லெஸ் வாடிக்கையாளர்களை கவர ஜியோ முடிவு செய்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஜியோவின் புதிய சலுகைகள் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான பாரதி ஏர்டெல், ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் இந்தியாவின் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் அதிகபட்ச வருவாய் (average revenue per user ) ரூ.300 அளவில் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியான அறிக்கையில் செப்டம்பர் 5-ந்தேதி முதல் இந்தியாவின் வயர்லெஸ் வாடிக்கையாளர்களில் 6 சதவிகிதம் பேர் ஜியோவை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கையை 15 சதவிகிதமாக அதிகரிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் பாதிக்கும் அதிகமான வருவாயினை தனது இலக்காக ஜியோ மார்ச் மாதம் அறிவித்து, இதனை 2020 - 2021 என்ற காலக்கட்டத்திற்குள் அடைய திட்டமிட்டது. பாரதி ஏர்டெல் இந்திய டெலிகாம் சந்தையில் 33.1 சதவிகித வருவாயும், வோடபோன் 23.5 சதவிகித வருவாய் மற்றும் ஐடியா செல்லுலார் 18.7 சதவிகித வருவாயினை ஈட்டி வருகின்றன, எனி்னும் இவை கடந்த டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டு நிலவரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளதால் மேலும் குறைந்த விலையில் சலுகைகளை ஜியோ அறிவிக்கலாம் என சந்தை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றிற்கு 600,000 என்ற கணக்கில் 170 நாட்களில் ஜியோ நெட்வொர்க்கில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்தனர்.

மார்ச் 31, 2017 வரையிலான காலகட்டம் வரை 10.9 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர். அதன்படி 40 நாட்களில் 90 லட்சம் வாடிக்கையாளர்கள் அதாவது நாள் ஒன்றிற்கு 225,000 பேர் என்ற கணக்கில் ஜியோவில் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.

Next Story