25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் கொரில்லா மாத்வி ஹித்மா


25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் கொரில்லா மாத்வி ஹித்மா
x
தினத்தந்தி 26 April 2017 12:18 PM GMT (Updated: 26 April 2017 12:17 PM GMT)

சத்தீஷ்காரில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் கொரில்லா மாத்வி ஹித்மா என தெரியவந்து உள்ளது.


சத்தீஷ்காரின் தண்டேவாடாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் 76 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், இதனையடுத்து நடத்தப்பட்ட மற்றும் ஒரு பயங்கரவாத தாக்குதல்தான் சுக்மா தாக்குதலாகும். 

சுக்மாவில் கடந்த மார்ச் 11-ம் தேதியும் சிஆர்பிஎப் படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியிலும் மாத்வி ஹித்மா இருக்கலாம் என கூறப்படுகிறது. மாத்வி ஹித்மா, ஹித்மாலு மற்றும் சந்தோஷ் என்ற பெயராலும் அறியப்படுகின்றான். பாஸ்தர் பகுதியில் மிகவும் பயங்கரமான மாவோயிஸ்ட் தலைவர்களில் இவனும் ஒருவன் என கருதப்படுகிறது. ஹித்மா தெற்கு சும்மாவின் பார்வதி கிராமத்தில் பிறந்தவன். தெற்கு சுக்மா, தண்டேவாடா மற்றும் பிஜாபூர் பகுதிகளில் தாக்குதல்களில் சதிதிட்டம் தீட்டியவன் எனவும் கூறப்படுகிறது. பிராந்தியத்தில் பாதுகாப்பு படையின் நகர்வுகளை கண்டறிய சிறப்பு நெட்வோர்க்கையையும் இயக்கி வருகின்றான் என்பது தெரியவந்து உள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்தின் கடவுளாகவும் இவன் பார்க்கப்படுகின்றான். 2013-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் இவனுடைய சதிதிட்டமும் உள்ளது.

பாஸ்தரில் உள்ளூர் தீவிரவாத கமாண்டர்களுடன் தொடர்பில் கொண்டவன் மாத்வி ஹித்மா. 

பழங்குடி சமூகங்களில் நிலத்திற்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் மாவோயிஸ்ட் இயக்கம் நாடு முழுவதும் 10 மாநிலங்களில் செயல்படுகிறது. இவற்றில் சத்தீஷ்கார் மாநிலம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.

இதில் மிகவும் கவலைக்குரிய தகவலாக மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இணையும் இளைஞர்கள் மாத்வி ஹித்மாவை தங்களுடைய ரோல்-மாடலாக கருதுகிறார்கள் என்பதுதான் என போலீஸ் தெரிவித்து உள்ளது. மேலும் பல்வேறு தகவல்கள் மாத்வி குறித்து வெளியாகி வருகிறது.

இதற்கிடையே இப்போது சுக்மா தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வி என்பதை உள்ளூர் போலீஸ் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டு உள்ளனர்..


Next Story