நகராட்சி தேர்தலில் வெற்றி: பாரதீய ஜனதாவுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து


நகராட்சி தேர்தலில் வெற்றி: பாரதீய ஜனதாவுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
x
தினத்தந்தி 26 April 2017 1:30 PM GMT (Updated: 26 April 2017 1:29 PM GMT)

டெல்லி நகராட்சி தேர்தலில் பாரதீய ஜனதா மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லிக்கு உட்பட்ட கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்த பாஜக மொத்தம் 181 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மூன்று நகராட்சிகளிலும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், தேசிய கட்சியான காங்கிரஸ் 38 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி செய்து பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், ” 3 நகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.வை வாழ்த்துகிறேன். டெல்லி மேம்பாட்டிற்காக எனது அரசு, நகராட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர் நோக்கி  எனது அரசு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Next Story