வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு


வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு
x
தினத்தந்தி 26 April 2017 11:30 PM GMT (Updated: 26 April 2017 10:35 PM GMT)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை சி.பி.ஐ. கோர்ட்டில் முடிவடைந்தது. இந்த வழக்கில் ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

புதுடெல்லி,

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தரப்பில் 2 வழக்குகளும், மத்திய அமலாக்கத்துறை சார்பில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் 2011–ம் ஆண்டு முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு

இந்த 3 வழக்குகள் மீதும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இதில் எழுத்துப்பூர்வமான அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி சைனி ஒத்திவைத்தார். ஜூலை 15–ந் தேதி இந்த 3 வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விரும்பினால் ஜூலை 5–ந் தேதிக்குள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி கூறினார்.

வழக்குகள் விவரம்

சி.பி.ஐ. தொடர்ந்த முதல் வழக்கில், ஆ.ராசா, கனிமொழி எம்.பி. தவிர, முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த், ஆ.ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா, சுவாம் டெலிகாம் புரமோட்டார்சின் ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவத்தின் நிர்வாக மேலாளர் சஞ்சய் சந்திரா, குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டி.வி. இயக்குனர் சரத்குமார் உள்பட 14 பேர் மற்றும் ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம், யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனம் ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. 2011–ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் 122, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது.

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

சி.பி.ஐ.யின் 2–வது வழக்கில் எஸ்ஸார் குரூப், புரமோட்டார்கள் ரவி ரூயா, அன்சுமன் ரூயா, லூப் டெலிகாம் புரமோட்டார்கள் கிரண் கேதான், அவருடைய கணவர் ஐ.பி.கேதான், எஸ்ஸார் குரூப் இயக்குனர் விகாஷ் ‌ஷரப் மற்றும் லூப் டெலிகாம், லூப் மொபைல் இந்தியா, எஸ்ஸார் டெலி ஹோல்டிங் ஆகிய 3 நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வழங்கப்பட்ட குற்றச்சாட்டில் ஆ.ராசா, கனிமொழி, ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிப் பால்வா உள்பட 19 பேர் மீது 2014–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க வாய்ப்பு உள்ளது.

Next Story