தொடர்ந்து 3–வது முறையாக டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி


தொடர்ந்து 3–வது முறையாக டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி
x
தினத்தந்தி 26 April 2017 11:45 PM GMT (Updated: 26 April 2017 10:39 PM GMT)

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி தொடர்ந்து 3–வது முறையாக அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிற டெல்லியில், டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என்னும் 3 மாநகராட்சிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 272 வார்டுகளில் 2 வார்டுகளில் வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 270 வார்டுகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட இந்த தேர்தலில் 54 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பா.ஜனதா வெற்றி பெறும் என தெரிவித்தன.

பா.ஜனதா வெற்றி

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று 35 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே 3 மாநகராட்சிகளிலுமே பா.ஜனதா கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.

இறுதியில் 3 மாநகராட்சிகளிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று, தனது ஆட்சி நிர்வாகத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இது பா.ஜனதாவுக்கு தொடர்ந்து 3–வது முறையாக கிடைத்துள்ள ஹாட்ரிக் வெற்றி ஆகும். 2–வது இடத்தை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. 3–வது இடம் காங்கிரசுக்கு போனது.

இறுதி நிலவரம் வருமாறு:–

டெல்லி வடக்கு

மொத்த வார்டுகள் – 104

தேர்தல் நடந்தது – 103

முடிவு தெரிந்தவை – 103

பா.ஜனதா – 64

ஆம் ஆத்மி – 21

காங்கிரஸ் – 15

மற்றவை – 3

டெல்லி தெற்கு

மொத்த வார்டுகள் – 104

முடிவு தெரிந்தவை – 104

பா.ஜனதா – 70

ஆம் ஆத்மி – 16

காங்கிரஸ் – 12

மற்றவை – 6

டெல்லி கிழக்கு

மொத்த வார்டுகள் – 64

தேர்தல் நடந்தது – 63

முடிவு தெரிந்தவை – 63

பா.ஜனதா – 48

ஆம் ஆத்மி – 10

காங்கிரஸ் – 3

மற்றவை – 2

முடிவும், விளைவும்

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளுக்கு பா.ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்த தேர்தல் வெற்றியை சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான மத்திய ஆயுதப்படையினருக்கு சமர்ப்பணம் செய்வதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி கருத்து தெரிவிக்கையில், ‘‘சுக்மாவில் மத்திய ஆயுதப்படையினர் 25 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அனைவரின் இதயங்களிலும் சோகம் நிரம்பி உள்ளது. இந்த வெற்றியை பா.ஜனதா கொண்டாடாது. சுக்மாவில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பணம் செய்கிறோம்’’ என கூறினார்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம், மின்னணு ஓட்டு எந்திரங்கள்தான் என ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை முதல்–மந்திரியுமான மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். இதேபோன்ற கருத்தை டெல்லி அரசின் மூத்த மந்திரி கோபால் ராயும் வெளியிட்டார்.

இதற்கிடையே டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் பி.சி. சாக்கோவும், டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கானும் பதவி விலகினர்.

இதேபோன்று தனது கட்சி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் திலிப் பாண்டே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Next Story