டெல்லி நகராட்சி தேர்தலில் படுதோல்வி: ஆலோசனை நடத்த எம்.எல்.ஏக்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பு


டெல்லி நகராட்சி தேர்தலில் படுதோல்வி:  ஆலோசனை நடத்த  எம்.எல்.ஏக்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பு
x
தினத்தந்தி 27 April 2017 7:05 AM GMT (Updated: 27 April 2017 7:04 AM GMT)

டெல்லி நகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் ஆலோசனை நடத்த அக்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 181 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 48 வார்டுகளில் வெற்றிபெற்று 2-ம் இடத்திலும் காங்கிரஸ் கட்சி 38 வார்டில் வெற்றி பெற்று 3 இடத்திலும் உள்ளது.

இந்த தோல்வி ஆளும் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி தோல்விக்கு பொறுப்பேற்று சிலர் கட்சியின் பொறுப்பையும் ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த சூழலில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.தனது இல்லத்தில் நடைபெற உள்ள  இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி  நகராட்சி தேர்தலில் பெற்ற படுதோல்வி குறித்து  ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

நேற்றைய  தோல்வியின்  மூலம் ஆம் ஆத்மி  வாக்கு சதவீதம் கடந்த 2015 சட்ட மன்ற தேர்தலில் பெற்றதை விட பாதியாக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற டெல்லி சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி டெபாசிட் இழந்தது.  இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


Next Story