நாட்டின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை மோடி திறந்து வைத்தார்


நாட்டின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை மோடி திறந்து  வைத்தார்
x
தினத்தந்தி 27 May 2017 12:00 AM GMT (Updated: 26 May 2017 8:41 PM GMT)

அசாம்–அருணாசல பிரதேச மாநிலங்களை இணைத்து கட்டப்பட்டு உள்ள நாட்டிலேயே மிகவும் நீளமான ஆற்றுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

கவுகாத்தி, 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், தின்சுகியா மாவட்டத்துக்கு உட்பட்ட சாதியா நகருக்கும், அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கும் இடையே லோஹித் நதி பாய்கிறது. பிரம்மபுத்திராவின் கிளை நதியான இதன் ஒரு கரையில் உள்ள மக்கள் மறுகரைக்கு சென்று வர பெரும்பாலும் படகுகள் உள்ளிட்ட நீர்வழி போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.

இதைப்போல சீன எல்லை அருகே அமைந்துள்ள அருணாசல பிரதேசத்தில் அந்த நாட்டு ராணுவம் அடிக்கடி அத்துமீறி வருகிறது. அங்கு படைக்கலன்கள் மற்றும் வீரர்களை விரைவில் கொண்டு செல்ல போதிய சாலை வசதிகளும் இல்லை. 

9.15 கி.மீ. நீளம்

எனவே அசாமின் கிழக்கு முனையான சாதியா நகரையும், தோலாவையும் இணைத்து லோஹித் நதியின் குறுக்கே பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2011–ம் ஆண்டு இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. ரூ.2056 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.

9.15 கி.மீ. தூரம் கொண்ட இந்த பாலம் இந்தியாவிலேயே மிகவும் நீளமானதாகும். அந்தவகையில் மும்பையில் பந்த்ரா– ஒர்லி இடையே கடல் மீது கட்டப்பட்டு உள்ள பாலத்தை விட 3.5 கி.மீ. அதிக நீளமுடையது. மேலும் ஆசியாவில் 2–வது நீளமான பாலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

திறந்து வைத்தார்

இந்த பாலத்தின் திறப்பு விழா, அதன் அசாம் முனையான சாதியா நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாலத்தை திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, அசாம் முதல்–மந்திரி சர்பானந்தா சோனோவால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் அந்த பாலத்தில் பாதுகாப்பு வீரர்கள் யாரும் இல்லாமல், தனியாக நடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற அவர், பாலத்தின் கீழே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அழகையும், பாலத்தின் கம்பீரத்தையும் கண்டு ரசித்தார்.

பின்னர் வாகனம் மூலம் பாலத்தின் மற்றொரு முனையான அருணாசல பிரதேசத்தின் தோலாவுக்கு சென்று விட்டு மீண்டும் சாதியாவுக்கு அவர் திரும்பினார். அவருடன் முதல்–மந்திரி, கவர்னர் போன்ற உயர்மட்ட தலைவர்களும் சென்று வந்தனர்.

பாடகரின் பெயர்

இதைத்தொடர்ந்து சாதியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவையொட்டி நடந்த இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது கூறியதாவது:–

தற்போது திறக்கப்பட்ட இந்த பாலத்துக்கு சாதியாவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் புபென் ஹசரிகாவின் பெயர் சூட்டப்படுகிறது. தனது இசையாலும், பாடல்களாலும் தேச ஒற்றுமைக்கு அவர் அயராது பாடுபட்டார். 

இந்த பாலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மக்களின் நெருக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான தொலைவு 165 கி.மீ. வரை குறைக்கப்படுவதுடன், பயண நேரமும் 7 முதல் 8 மணி வரை குறையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

வல்லரசு கனவு

அசாம் மற்றும் அருணாசல பிரதேச வளர்ச்சிக்கு உதவுவதுடன், இந்தியா வல்லரசாகும் கனவையும் இந்த பாலம் நிறைவு செய்யும். அந்த வளர்ச்சி இந்த வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து தொடங்கவும் வழிவகுக்கும். 

மேலும் வடகிழக்கு பிராந்தியத்தின் உயர்தர இஞ்சி விவசாயிகளுக்கு புதிய வழி திறந்திருப்பதுடன், அவர்களது பொருளாதார நிலைமை மேம்படவும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தரமான வளர்ச்சிக்கு சிறந்த கட்டமைப்புகளே முதல் தேவை. அந்தவகையில் நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் நிரந்தரமான கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சீன எல்லை அருகே

3 பாதைகளை கொண்ட இந்த பாலம் கனரக ராணுவ வாகனங்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 60 டன் பீரங்கிகள் உள்ளிட்ட படைக்கலன்களை எடுத்து செல்லும் வகையில் கட்டப்பட்டு இருக்கிறது. 

சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் கட்டப்பட்டு உள்ள இந்த பாலம் தேசிய நெடுஞ்சாலை–37–ல் ரூபாலி (அசாம்) நகரையும், தேசிய நெடுஞ்சாலை–52–ல் மேகா (அருணாச்சல பிரதேசம்) பகுதியையும் இணைக்கிறது.

Next Story