இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை மத்திய அரசு அதிரடி உத்தரவு


இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை மத்திய அரசு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 27 May 2017 12:30 AM GMT (Updated: 26 May 2017 8:49 PM GMT)

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது. 

அதிரடி உத்தரவு

அந்த வகையில், இப்போது கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதற்காக, 1960–ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்ற  நடவடிக்கைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள், 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இறைச்சிக்காக கால்நடைகளை விற்க தடை

 இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்காவிட்டாலும்கூட, சந்தையில் இவற்றை இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை விதித்திருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

ஏனெனில் இறைச்சிக்கான கால்நடைகள் தற்போது 90 சதவீத அளவுக்கு கால்நடை சந்தைகளில்தான் விற்கப்படுகின்றன; வாங்கப்படுகின்றன. 

நமது நாட்டின் இறைச்சி சந்தை ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலானது. 

இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ஒட்டுமொத்த கால்நடை வணிகமும், சந்தையும் பாதிப்புக்கு உள்ளாகும்.

கசாப்பு கடைக்காரர்கள் இனி பண்ணைக்கு சென்றுதான் இறைச்சிக்கான கால்நடைகளை வாங்க முடியும்.

எழுத்து வடிவில் ஒப்புதல்

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங் கள் வருமாறு:–

* இளம் கால்நடைகளை விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.

* கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்க வில்லை என்று எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்த பிறகே அந்த கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும். 

* கால்நடைகளை விற்பனை செய்கிறபோது, தன்னை விவசாயி என்று நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கால்நடைகளை விற்க முடியும்.’

* காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் ஆகியவை இந்த தடையில் வருகிறது.

கோவில்களில் பலியிடக்கூடாது

* அனைத்து கால்நடை சந்தைகளும் 3 மாதங்களுக்குள் மாவட்ட கால்நடை மேற்பார்வை குழுவிடம் விண்ணப்பித்து தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* கால்நடைகளை விலைக்கு வாங்கியவர்கள் அவற்றை இறைச்சிக்காக வெட்டவும் கூடாது. இறைச்சிக்காக விற்பனை செய்யவும் கூடாது.

* கோவில்களில் கால்நடைகளை பலியிடக்கூடாது.

* மாநில கால்நடைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி பெறாமல், கால்நடைகளை விற்பனை செய்கிறவர், அடுத்த மாநிலத்தினருக்கு விற்பனை செய்யக்கூடாது.

* கால்நடைகளின் கொம்புகளில் வர்ணம் பூசுதல், கால்நடைகள் மீது அலங்கார பொருட்களை அணிவித்தல், கால்நடைகளை நடனமாட செய்வது, எருமைகளின் காதுகளை அறுத்து விடுதல், உரிய படுக்கை இன்றி விலங்குகளை வெற்றுத்தரையில் படுக்க வைத்தல் மிருகவதையில் அடங்கும்.

கால்நடை ஆய்வாளர்

* கால்நடைகள் சந்தையில் நுழைவதற்கு முன்பு அவற்றை பரிசோதிப்பதற்காக கால்நடை ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவதற்கு விதிமுறை வழி செய்கிறது. கால்நடைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்ல பயன்படும் வாகனங்கள் சட்டப்படி கால்நடைகளை அழைத்துச் செல்வதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை கால்நடை ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும்.

* கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் மேற்பார்வை குழுக்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்கப்பட வேண்டும்.

* கால்நடைகளை விற்பதற்காக சந்தைக்கு வருபவர், அந்த கால்நடைகள் இறைச்சிக்கு வெட்டுவதற்காக விற்பனை செய்யப்படவில்லை என்று கால்நடைகளின் உரிமையாளரிடம் ஒப்புதல் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை உரிய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

* சந்தையில் கால்நடை ஒன்றை விற்ற பின்னர், அதை சந்தையில் இருந்து கொண்டு செல்வதற்கு முன் அவற்றை விற்றதற்கான ஆதாரத்தை 5 நகல்களாக தயாரிக்க வேண்டும். அதில் முதல் நகல் கால்நடையை வாங்கியவருக்கும், 2–வது நகல் விற்பனை செய்தவருக்கும், 3–வது நகல் வாங்கியவர் வசிக்கிற தாலுகா அலுவலகத்துக்கும், 4–வது நகல் மாவட்ட கால்நடை அதிகாரிக்கும், 5–வது நகல் கால்நடை சந்தை குழுவுக்கும் வழங்கப்பட வேண்டும். 

ஆவணங்கள்

* தற்போது உள்ள கால்நடை சந்தைகளை கால்நடை சந்தை மேற்பார்வை குழுவினர் அடையாளம் கண்டு அவற்றை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். புதிதாக துவங்கப்படும் கால்நடை சந்தைகள் மாவட்ட குழுவிடம் உரிய ஆவணங்களையும் சந்தையின் வரைபடங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

* கால்நடைகள் விற்பனை செய்யும்போது இந்த குழுவின் அதிகாரிகள் கால்நடைகள் விவசாயத்துக்காக விற்கப்படுகின்றன என்று விற்பவரிடமும் இந்த கால்நடைகளை வாங்குபவர் விவசாயிதான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை விலைக்கு வாங்குபவர் அந்த கால்நடைகள் 6 மாதங்களுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற உறுதியையும் அளிக்க வேண்டும். 

இந்த விதிமுறைகள் காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்படும்.

இந்த அறிவிக்கையில் தனி நபர்கள் கால்நடைகள் வாங்குவது, விற்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த வேளையில், இப்போது இந்த விதிமுறைகளை மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story