பயங்கரவாதிகள் 8 பேர் பலி தீவிரவாத இயக்க தளபதியும் சுட்டுக்கொல்லப்பட்டார்


பயங்கரவாதிகள் 8 பேர் பலி தீவிரவாத இயக்க தளபதியும் சுட்டுக்கொல்லப்பட்டார்
x
தினத்தந்தி 27 May 2017 11:30 PM GMT (Updated: 27 May 2017 8:32 PM GMT)

காஷ்மீரில் ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி உள்பட 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இங்கு பாகிஸ்தானை மையமாக கொண்ட அமைப்புகள் மட்டுமின்றி, உள்ளூரை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் இயங்கி வருகின்றன. இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு முக்கியமானதாகும்.

இந்த அமைப்பின் புல்வாமா மாவட்ட தளபதியாக பர்கான் வானி என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். இதனால் பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பல மாதங்களாக நடந்த வன்முறைகளில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

சப்சார் அகமது பட்

பர்கான் வானியின் மரணத்தை தொடர்ந்து, அந்த அமைப்பின் தளபதியாக சப்சார் அகமது பட் என்பவர் நியமிக்கப்பட்டார். புல்வாமா மாவட்டத்தின் டிரால் கிராமத்துக்கு உட்பட்ட ராத்சனா பகுதியை சேர்ந்த இவரும், அங்கு பல்வேறு நாசவேலைகளை நடத்தி வந்தார். எனவே இவரை பாதுகாப்பு படையினர் தேடிவந்தனர்.

இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தின் சாமு, டிரால் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு, மாநில போலீசாரின் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து ராணுவம் தீவிர சோதனையில் ஈடுபட்டது. அப்போது டிரால் கிராமத்தின் சைமோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

2 பயங்கரவாதிகள் பலி

உடனே படையினரும் திருப்பி தாக்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே நள்ளிரவு வரை துப்பாக்கிச்சண்டை நீடித்தது. பின்னர் இருளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பிச்செல்லாமல் இருக்க தாக்குதலை நிறுத்திய பாதுகாப்பு படையினர், அந்த கிராமங்களை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தினர்.

பின்னர் நேற்று அதிகாலையில் மீண்டும் தாக்குதல் தொடங்கியது. பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டவாறு இருந்தனர். அப்போது ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்த வீடு உருக்குலைந்ததுடன், அதில் இருந்த 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதியான சப்சார் அகமது பட் ஆவார்.

போராட்டத்தில் ஒருவர் சாவு

இந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கே குவிந்து, ராணுவ வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும் ராத்சனா மற்றும் சைமோ பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

உடனே அந்த பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரவை துப்பாக்கிகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் மக்கள் கலைந்து செல்லாமல் கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அகிப் அகமது என்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த 2 பேர் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது அகிப் அகமது உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

கடைகள் அடைப்பு

சப்சார் அகமது பட் உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தகவல் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான மக்கள் சாலைகளில் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்ரீநகர் அருகே மைசுமா பகுதியில் குவிந்த மக்கள் லால் சவுக் நோக்கி பேரணியாக சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் உடனே அடைக்கப்பட்டன. சாலைகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன.

இதைப்போல காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் பல இடங்களில் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

மாநிலத்தில் வதந்தி எதுவும் பரவாமல் இருக்க பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட செல்போன் சேவை முடக்கப்பட்டது. பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களில் ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.

முழு அடைப்புக்கு அழைப்பு

பயங்கரவாதிகளின் கொலைக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆயுதம் எதுவும் இன்றி போராடி வரும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டிப்பதாகவும், இதை வலியுறுத்தி ஞாயிறு (இன்று) மற்றும் திங்கள் ஆகிய 2 நாட்களும் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுப்பதாகவும், பிரிவினைவாதிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஊடுருவ முயற்சி

இதற்கிடையே நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் சில பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதி வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்தனர். உடனே அவர்களை சுற்றிவளைத்த வீரர்கள், சரணடையுமாறு வலியுறுத்தினர்.

இதை ஏற்க மறுத்த பயங்கரவாதிகள், தானியங்கி ஆயுதங்கள் மூலம் ராணுவம் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து ராணுவமும் பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் அருகில் உள்ள ராணுவ முகாம்களில் இருந்து கூடுதல் வீரர்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.


Next Story