மாடுகள் விற்பனை தடைக்கு விலங்குகள் நல அமைப்பு வரவேற்பு ‘‘கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்த உதவும்’’


மாடுகள் விற்பனை தடைக்கு விலங்குகள் நல அமைப்பு வரவேற்பு ‘‘கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்த உதவும்’’
x
தினத்தந்தி 27 May 2017 11:15 PM GMT (Updated: 27 May 2017 8:36 PM GMT)

மாடுகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை விலங்குகள் நல அமைப்பு வரவேற்றுள்ளது. இத்தடை, கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்த உதவும் என்று கூறியுள்ளது.

புதுடெல்லி,

கால்நடை சந்தைகளில் இருந்து இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ தடை விதித்து மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு ‘அனிமல் ஈக்வாலிட்டி’ என்ற விலங்குகள் நல அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அம்ருதா உபாலே கூறியதாவது:–

நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில் கால்நடைகளுக்கு சொல்லொணா துயரங்கள் இழைக்கப்படுகின்றன. இந்த சந்தைகளை ஒழுங்குபடுத்தவோ, யாரையும் பொறுப்புக்கு உள்ளாக்கவோ முன்பு எந்த நடைமுறையும் இல்லாமல் இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகள், இதில் உள்ள ஓட்டைகளை அடைத்து, கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்த உதவும்.

தமிழ்நாட்டில் ஆய்வு

எங்கள் அமைப்பு, தமிழ்நாட்டில் பொள்ளாச்சி கால்நடை சந்தை உள்பட நாடு முழுவதும் 8 கால்நடை சந்தைகளில் ஆய்வு செய்தது. அதில், அதிர்ச்சிகரமான உண்மைகளை அறிந்தோம்.

விவசாயத்துக்காக காளைகளையும், பால் வியாபாரத்துக்காக பசுக்களையும் வாங்குவதற்காக நடத்தப்படும் இந்த சந்தைகளில், பால் தர இயலாத பசுக்களையும், ஆண் காளைக்கன்றுகளையும் இறைச்சிக்காக விற்கிறார்கள்.

மாட்டுக்கு சூடு

விற்பனைக்காக கொண்டு வரும் கால்நடைகளுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம் என எதுவும் கொடுப்பது இல்லை. கொம்புகளை அகற்றி விடுகிறார்கள். முகத்திலும், உடலிலும் சூடு வைத்த தழும்புகள் காணப்படுகின்றன.

சரக்கு வாகனங்களில் கால்நடைகளை ஏற்றும்போது, கால்நடைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல், வாலைப்பிடித்து முறுக்குதல், மூக்கை தேய்த்தல், தார்க்குச்சியால் குத்துதல் போன்ற சித்ரவதைகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த காரியங்களால், கால்நடைகளின் உடலில் ரத்தம் வழிகிறது. கன்றுகளையும், நோய்வாய்ப்பட்ட மாடுகளையும் சரக்கு வாகனங்களில் தூக்கி வீசுகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சரக்கு வாகனங்களில் ஏற மறுக்கும் பசுக்களையும், காளைகளையும் ஏமாற்ற வைக்கோல் அடைக்கப்பட்ட கன்றுக்குட்டி உருவத்தை காண்பித்து ஏமாற்றும் வேலையிலும் ஈடுபடுகிறார்கள்.

இதுபற்றிய ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இவற்றுக்கு முடிவு கட்ட புதிய விதிமுறைகளை வகுக்குமாறு உத்தரவிட்டது. அதுபோல் நாங்களும் எங்கள் ஆய்வு முடிவுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும், கால்நடை பராமரிப்பு துறையிடமும் அளித்தோம்.

சில சிபாரிசுகளையும் தெரிவித்தோம். அவை இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கு அனுப்பப்பட்டு, அந்த அமைப்பு இந்த விதிமுறைகளை சிபாரிசு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story