பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு சோனியா கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காதது பற்றி பேட்டி


பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு சோனியா கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காதது பற்றி பேட்டி
x
தினத்தந்தி 28 May 2017 12:00 AM GMT (Updated: 27 May 2017 9:17 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடியை நிதிஷ் குமார் சந்தித்தார். சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காதது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி ஆலோசனை நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். அதில், 17 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சோனியா காந்தி மதிய விருந்து அளித்தார்.

இந்த கூட்டத்தில், பீகார் மாநில முதல்–மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. தனக்கு பதிலாக, கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவை அனுப்பிவைத்தார்.

மோடி விருந்து

இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் டெல்லிக்கு வந்துள்ளார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதிய விருந்து அளித்தார். அதில் பங்கேற்க வருமாறு பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமாருக்கு மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

அதை ஏற்று, நிதிஷ் குமாரும் விருந்தில் கலந்து கொண்டார்.

சந்திப்பு

விருந்து முடிந்த பிறகு, பிரதமர் மோடியை நிதிஷ் குமார் தனியாக சந்தித்து பேசினார். அப்போது, பீகார் மாநிலம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். இச்சந்திப்பு பற்றிய தகவலை பிரதமர் அலுவலகம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது.

பல ஆண்டுகளாக, பிரதமர் மோடியை விமர்சித்து வந்த நிதிஷ் குமார், சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காததற்கு மறுநாள், மோடியை சந்தித்து இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு பற்றியும், சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காதது பற்றியும் நிதிஷ் குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு நிதிஷ் குமார் கூறியதாவது:–

இரண்டு நிகழ்வுகளையும் முடிச்சு போட்டு பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒன்று, அரசியல் ஆலோசனை கூட்டம். இப்போது நடந்து இருப்பது, மொரீஷியஸ் பிரதமருக்கு அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்ட சம்பவம். பீகார் முதல்–மந்திரி என்ற முறையில், எனக்கு இந்த விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மொரீஷியஸ் நாட்டில் பீகார் மாநில வம்சாவளியினர் பெரும்பாலானோர் வசித்து வருவதால், அந்நாட்டுக்கும், பீகாருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது.

இதற்காக டெல்லிக்கு வந்ததை பயன்படுத்தி, கங்கை ஆற்றில் வண்டல் மண் படிந்திருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை பிரதமரிடம் எழுப்பினேன். இந்த ஆண்டும் வெள்ள அபாயம் நிலவுவதை எடுத்துக் கூறினேன்.

புறக்கணித்தேனா?

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஏற்கனவே அதுபற்றி கடந்த மாதம் 20–ந் தேதி விவாதித்துள்ளேன்.

இதர எதிர்க்கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி உள்ளேன். எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தை நான் புறக்கணித்ததாக வெளியான தகவல், தவறான புரிந்து கொள்ளல் அடிப்படையிலானது.

பீகாரில், ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் நடத்துவதே இரு கட்சிகளும் அடங்கிய கூட்டணி அரசுதான்.

இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.



Next Story