காஷ்மீரில் நடந்த கல்வீச்சின் போது வாலிபரை மனித கேடயமாக பயன்படுத்தியதற்கு ராணுவ தளபதி ஆதரவு


காஷ்மீரில் நடந்த கல்வீச்சின் போது வாலிபரை மனித கேடயமாக பயன்படுத்தியதற்கு ராணுவ தளபதி ஆதரவு
x
தினத்தந்தி 28 May 2017 10:00 PM GMT (Updated: 28 May 2017 8:41 PM GMT)

காஷ்மீரில் நடந்த கல்வீச்சின் போது உள்ளூர்வாசி ஒருவரை ராணுவத்தினர் மனித கேடயமாக பயன்படுத்தியதற்கு ஆதரவு தெரிவித்த ராணுவ தளபதி

புதுடெல்லி,

காஷ்மீரில் நடந்த கல்வீச்சின் போது உள்ளூர்வாசி ஒருவரை ராணுவத்தினர் மனித கேடயமாக பயன்படுத்தியதற்கு ஆதரவு தெரிவித்த ராணுவ தளபதி, அங்கு நடைபெறும் மறைமுக போரை இதுபோன்ற புதுமையான வழிகளில்தான் கையாள வேண்டும் என கூறினார்.

‘ஜீப்’பில் கட்டினார்

காஷ்மீரின் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 9–ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. பட்காம் மாவட்டத்தில் சுமார் 1200 பேர் ராணுவத்தினரை சூழ்ந்து கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகளை கவனித்து வந்த ராணுவ அதிகாரி லீத்தல் கோகாய், உள்ளூரைச்சேர்ந்த பரூக் தார் என்ற வாலிபரை ராணுவ ஜீப்பில் மனித கேடயமாக கட்டி வைத்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்பு

ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள், காஷ்மீரின் பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த நடவடிக்கையால் ராணுவத்துக்கு இழுக்கு ஏற்பட்டதாக முன்னாள் ராணுவ வீரர்கள் சிலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, கல்வீச்சில் இருந்து படையினரை காப்பாற்ற புதுமையான வழியை கையாண்டதற்காக ராணுவ அதிகாரி லீத்தல் கோகாய்க்கு ராணுவ அதிகாரிகள் விருது வழங்கி பாராட்டினர்.

மறைமுக போர்

அவரது இந்த நடவடிக்கையை ராணுவ தளபதி பிபின் ராவத்தும் நியாயப்படுத்தி உள்ளார். டெல்லியில் நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், இது குறித்து கூறியதாவது:–

போரில் எதிராளி நேருக்கு நேர் வரும்போதுதான் தகுந்த சட்ட திட்டங்களின்படி தாக்க முடியும். ஆனால் காஷ்மீரில் நடப்பது மறைமுக போர். கீழ்த்தரமான வழியில் அது நடத்தப்படுகிறது. அதற்கு இதுபோன்ற புதுமையான வழிகளைத்தான் கையாள வேண்டும்.

உண்மையில் அந்த மக்கள் கற்களுக்கு பதிலாக எங்களுக்கு எதிராக துப்பாக்கியை ஏந்தியிருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அதன்பிறகு நான் நினைத்ததை எங்களால் செய்ய முடியும்.

வீரர்களின் மன உறுதி

ஆனால் அவர்கள், எங்கள் (ராணுவம்) மீது கற்களை வீசுகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை எறிகிறார்கள். இதை எப்படி எதிர்கொள்வது? என எங்கள் வீரர்கள் என்னிடம் கேட்டால், பொறுத்திருந்து செத்து மடியுங்கள்.... தேசியக்கொடி போர்த்தப்பட்ட அழகான சவப்பெட்டியுடன் நான் வந்து, தகுந்த மரியாதையுடன் உங்கள் உடலை வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என்று சொல்ல வேண்டுமா? ஒரு தளபதியாக, இந்த வார்த்தைகளை நான் கூற முடியுமா?

அங்கு பணியாற்றும் வீரர்களின் மன உறுதியை பாதுகாப்பது எனது கடமை. போர்க்களத்தில் இருந்து வெகுதூரத்துக்கு அப்பால் நான் இருக்கிறேன். நான் உங்களுடன் இருக்கிறேன் என்று மட்டும் எனது வீரர்களுக்கு நான் சொல்ல முடியும். அங்குள்ள சூழ்நிலையை என்னால் ஆதிக்கம் செலுத்த முடியாது.

ஆயுதப்படையினருக்கு தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உண்டு. அன்று நடந்த வன்முறை மற்றும் கல்வீச்சின் போது ராணுவ அதிகாரி கோகாயால் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முடியும். ஆனால் அவர் அதை தேர்வு செய்யவில்லை.

கலவையான தீர்வு

நமது ராணுவத்தை பார்த்து எதிரிகள் அஞ்சும் அதே நேரம், சொந்த நாட்டு மக்களும் ராணுவத்தை பார்த்து பயப்பட வேண்டும். ராணுவத்தை கண்டு அஞ்சாத மக்களை கொண்ட எந்த நாடும் அழிவையே சந்திக்கும். நாங்கள் ஒரு நட்புரீதியான ராணுவம். ஆனால் சட்டம், ஒழுங்கை சீர்படுத்த நாங்கள் அழைக்கப்படும் போது, மக்கள் எங்களுக்கு அடங்க வேண்டும்.

ஒட்டுமொத்த காஷ்மீரும் கட்டுப்பாட்டை இழந்து இருப்பதாக கூறுவது தவறு. தெற்கு காஷ்மீருக்கு உட்பட்ட 4 மாவட்டங்கள் தான் வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ளன. காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு, அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் ஒரு கலவையான தீர்வாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.


Next Story